அமீரகத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா..!!! MoHAP அறிவிப்பு…!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று புதிதாக 50 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களில் நான்கு பேர் குணமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது கொரோனா வைரஸால் பாதித்தவர்கள், ஏற்கெனவே பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகள் என்று தெரிய வந்துள்ளது. இதன் மூலம் . ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 248 ஆக உள்ளது.
தற்பொழுது பாதிக்கப்பட்டவர்களில் இலங்கை, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஏமன், துனிசியா, தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம், தென் கொரியா, பல்கேரியா, பிரான்ஸ், செக் குடியரசு, ஆஸ்திரேலியா, லெபனான், கென்யா, மாலத்தீவுகள், சூடான் , ஈரான், அயர்லாந்து, மொராக்கோ, பாகிஸ்தான் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவரும் , இத்தாலி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், நெதர்லாந்து, ஜோர்டான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து தலா இரண்டு நபர்களும், அமெரிக்கா, பங்களாதேஷ் மற்றும் பாலஸ்தீனத்திலிருந்து தலா மூன்று நபர்களும், இந்தியாவில் இருந்து ஆறு பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத்தெரிய வந்துள்ளது.
அனைத்து நபர்களின் உடல்நிலையும் சீராக உள்ளது என்றும் அவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கொரோனா பாதித்தவர்களில் மூன்று பாகிஸ்தானியர்கள் மற்றும் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த ஒருவர் என நான்கு பேர் தற்பொழுது குணமடைந்துள்ளனர். இதனால் தற்பொழுது வரை அமீரகத்தில் 45 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து,சுகாதார அமைச்சகமும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுவது போன்ற ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது இடங்களைத் தவிர்க்கவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.