இந்தியா : கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு..!!! 370 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 370 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 5 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ள நிலையில், தற்பொழுது மேலும் இரண்டு பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
பீகார் மாநிலத்தை சேர்ந்த 38 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாட்னாவில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையில், தற்பொழுது அவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். எனினும், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து குஜராத் மாநிலத்தை சேர்ந்த 69 முதியவர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே கர்நாடகாவை சேர்ந்த ஒருவர், டெல்லியை சேர்ந்த ஒருவர், பஞ்சாபை சேர்ந்த ஒருவர் மற்றும் மஹாராஷ்ட்ராவை சேர்ந்த இருவர் ஆகிய 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி இந்தியா முழுவதும் இன்று ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இரவு 9 மணி வரை திட்டமிடப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவை நாளை காலை 5 மணி வரை நீட்டிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.