அமீரகம் : 1 மில்லியன் டாலர் ரொக்கப்பரிசை வென்ற 7 வயது தமிழக சிறுவன்..!!!
துபாய் டூட்டி பிரீ குலுக்கலில் (Dubai Duty Free Raffle) 1 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை தட்டிச் சென்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த 7 வயது சிறுவன்
கபில்ராஜ் கனகராஜ். கனகராஜ், துபாய் டூட்டி பிரீ 327 வது தொடரில் (series) டிக்கெட் எண் 4234 ஐ வைத்திருந்தார். இந்த டிக்கெட்டானது பிப்ரவரி 21 அன்று அவரது தந்தையால் வாங்கப்பட்டது.
கனகராஜாவின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் 27 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அஜ்மானில் வசித்து வருகிறார்.
பரிசு வென்ற பின் கனகராஜின் தந்தை இது பற்றிக் கூறுகையில், “இன்று நான் எப்படி உணர்கிறேன் என்பதை வெளிப்படுத்த வார்த்தைகள் போதாது. இந்த அற்புதமான தருணத்திற்கு எனது குடும்பமும் நானும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பரிசுத் தொகையின் ஒரு பகுதி நிச்சயமாக எங்கள் பர்னிச்சர் கடை வணிகத்திற்கும் எனது மகனின் எதிர்காலத்திற்கும் உதவியாக இருக்கும். எங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்த துபாய் டூட்டி பிரீ க்கு எங்களுடைய மனமார்ந்த நன்றி! ” என்று கூறியுள்ளார்.
இத்துடன், துபாய் டூட்டி பிரீ குலுக்கலில் ஆடம்பர வாகனங்களை வென்ற மூன்று பேரின் விபரங்களும் அறிவிக்கப்பட்டன.
துபாயைச் சேர்ந்த 57 வயதான தேவராஜ் சுப்பிரமணியம், சீரிஸ் 1749 இல் டிக்கெட் எண் 1106 உடன் மெர்சிடிஸ் பென்ஸ் S560 (Mercedes Benz S560 (Diamond White)) வென்றார்.
துபாயை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதான பிலிப்பைன் நாட்டை சேர்ந்த மேரி ஜாய் காண்டல்லா, தொடர் 402 இல் டிக்கெட் எண் 0112 உடன் மோட்டோ குஸ்ஸி V9 பாபர் ஸ்போர்ட் மோட்டார் சைக்கிளை (Moto Guzzi V9 Bobber Sport motorbike) வென்றார்.
துபாயில் வசிக்கும் சூடான் நாட்டைச் சேர்ந்த 44 வயதான அகமது சயீத் மொஹட், சீரிஸ் 403 இல் டிக்கெட் எண் 0642 உடன் ஏப்ரிலியா RSV4 RR (Aprilia RSV4 RR (Nero))ஐ வென்றார்.