கொரோனா வைரஸ் : இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் உயிரிழப்பு… பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அரசு அறிவுறுத்தல்!!

உலகிலுள்ள நாடுகள் அனைத்தும் கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து விடுபட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருந்தாலும், நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து கொண்டே வருகின்றது.
சீனாவில் தோன்றிய இந்த வைரஸானது தோன்றிய இடத்திலேயே பல பாதிப்புகளையும் இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவிற்கு அடுத்த படியாக உலகளவில் இத்தாலி நாடானது கொரோனாவால் பெரிதும் பாதிப்படைந்து கொண்டு வருகிறது. கொரோனா வைரஸினால் இத்தாலியின் நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகிக் கொண்டே இருக்கிறது.
இதுவரை இல்லாத அளவில், இத்தாலி நாட்டில் அனைத்து பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் நேற்று முதல் தனிமைப்படுத்தலை கட்டாயமாக்கியது இத்தாலி அரசு. இதில் அந்நாட்டில் வசிக்கும் 60 மில்லியன் மக்களுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
இத்தாலியில் ஒரே நாளில் 168 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதற்கு முந்தைய நிலவரப்படி, 463 பேர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். எனவே, இத்தாலியில் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 463 இலிருந்து 631 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இறப்பு விகிதம் 36% அதிகரித்துள்ளது என்று சிவில் பாதுகாப்பு நிறுவனம் செவ்வாயன்று கூறியது. இந்தளவிற்கு இறப்பு விகிதம் அதிகரித்தது இதுவே முதல் முறையென்றும் கூறப்படுகிறது.
இத்தாலியில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,172 லிருந்து 10,149 ஆக உயர்ந்துள்ளது. முதலில் பாதிக்கப்பட்டவர்களில் 1,004 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் 877 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இத்தாலியில் செவ்வாய்க்கிழமை அறிவித்த நாடு தழுவிய தனிமைப்படுத்தலை தொடர்ந்து அங்குள்ள கடைகளும் உணவகங்களும் மூடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் இத்தாலியில் உள்ள வீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.
ஏப்ரல் 3 ஆம் தேதி வரை அனைத்து இத்தாலியர்களும் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் எனவும் அரசாங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஒரு மேற்கத்திய தேசத்தில் இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.