அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு மாணவர் : பெற்றோர்கள் அதிர்ச்சி!!
ஐக்கிய அரபு அமீரக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் வியாழக்கிழமை அன்று 17 வயதான மாணவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதை உறுதி செய்துள்ளது. சமீபத்தில் ஒரு மாணவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகத்தில் இரண்டாவது முறையாக மற்றொரு பள்ளி மாணவர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவருக்கு கொரோனா வைரசிற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என தெரிகிறது. இது பெற்றோர்களிடையே கடும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகிறார். நாட்டில் சுகாதாரம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, நோயாளியை உடனடியாக தனிமைப்படுத்துவது மற்றும் பள்ளியில் வகுப்புகளை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் நிபுணர்களின் குழுக்கள் பள்ளி நிர்வாகத்திலும் அதைச் சுற்றியும் தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க, வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவரின் தொடர்பில் இருந்த அனைத்து நபர்களும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
சுகாதார அமைச்சகமானது, கொரோனா வைரஸ் பற்றிய அனைத்து தகவல்களையும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறவும், வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைத் தவிர்க்கவும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.