கொரோனா வைரஸ் : உலகளவில் 4,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!!!
உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,000 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
உலகளவில் 100 நாடுகளுக்கும் மேலாக பரவியிருக்கும் கொரோனா வைரஸால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,011 ஐ எட்டியுள்ளது. மேலும் 1,10,000க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகிலுள்ள அனைத்து நாடுகளின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது. கொரோனா வைரஸ், உலகளவில் நடக்க இருந்த மாநாடுகள், நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் போன்ற அனைத்து நிகழ்வுகளையும் பாதித்துள்ளது.
இன்று சீனாவில் வெளியிட்ட அறிக்கையில் 19 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தது. கடந்த ஜனவரி 21 ம் தேதி சீனஅரசு தொற்று நோயைக் கணக்கிடத் தொடங்கியதில் இருந்து இது மிகக் குறைவான எண்ணிக்கையாகும் என்று தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
17 பேர் கடந்த ஒரு நாளில் உயிரிழந்துள்ளதால் சீனாவில் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,136 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம்(WHO) திங்களன்று கூறியது.
சீனாவிற்கு அடுத்தபடியாக தென் கொரியா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பைக் கண்டுள்ளன. இத்தாலி நாடானது சீனாவிற்கு அடுத்த படியாக அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது.
இத்தாலியில் கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு மாகாணம் தனிமைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது மற்ற இடங்களிலும் வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால் நாடு முழுவதும் தனிமைப்படுத்தப்படுவதாக இத்தாலியின் பிரதமர் ஜியூசெப் கொன்டே தெரிவித்துள்ளார். அனைத்து மக்களும் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தங்களின் அவசரத் தேவைக்காக மட்டுமே வெளியே வருமாறு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டிலுள்ள 60 மில்லியன் மக்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.
அதே போல், ஈரான் நாட்டில் இருந்தே மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், பஹ்ரைன், கத்தார் மற்றும் குவைத் போன்ற நாடுகளுக்கு பெரும்பாலான கொரோனா நோய்தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், தொற்று நோயால் பாதிப்படைந்தவர்களில் 60,000 க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதில் ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் பாதிப்படைந்த 59 பேர்களில் 12 பேர் குணமடைந்ததாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.