தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு : வளைகுடா நாடுகளின் தற்போதைய நிலவரம்…!!!
உலகெங்கிலும் பல மாதங்களாக கொரோனாவின் பாதிப்பு கோரத்தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. உலகிலுள்ள பல்வேறு மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாலும் இன்றளவும் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னதாக, சில நாடுகளில் மட்டுமே பரவி இருந்த கொரோனா தற்பொழுது உலக நாடுகள் அனைத்திற்கும் பரவி மக்களை பாதித்துக் கொண்டிருக்கிறது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் விமான சேவை நிறுத்தம், வைரஸ் பாதித்த பெரும்பாலான நாடுகளில் அனைத்து பணிகளும் நிறுத்தம், மக்கள் அனைவரையும் அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் நடவடிக்கை போன்ற பல செயல்பாடுகள் கொரோனா வைரஸையொட்டி பல்வேறு நாடுகள் அறிவித்துள்ளன. உலக வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலால் உலகமே முடங்கி கொண்டிருக்கிறது.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பரவிய கொரோனா வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் மற்றும் பஹ்ரைன் ஆகிய அனைத்து நாடுகளும் கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் :
ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் 140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 31 பேர் குணமடைந்துள்ளனர். இந்த நிலையில், தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் இருவரும் வயதானவர்கள் என்றும் ஏற்கெனவே இதய நோய், சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அமீரகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, பல்வேறு நாடுகளுக்கான விமான சேவை ரத்து, வெளிநாடுகளில் இருக்கும் பயணிகள் அமீரகத்திற்கு வரத்தடை, சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தம், அமீரகத்தில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுதல், பொது மக்களுக்கான பொழுதுபோக்கு இடங்களை மூடுதல், அமீரகம் முழுவதும் தீவிர சுகாதார பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமே இருக்கிறது.
மேலும், பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு தொலைதூரக் கல்விக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
சவூதி அரேபியா :
வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவிய ஆரம்பகட்டத்தில் எவரும் அந்நாட்டில் பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் சவூதி அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், கடந்த ஒரு மாத காலமாக சவுதி அரேபியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது.
இன்று மட்டுமே 70 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரஸால் அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 344 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 8 பேர் வைரசால் பாதிக்கப்பட்டு தற்பொழுது குணமடைந்துள்ளனர்.
கொரோனாவின் பாதிப்பையொட்டி அந்நாட்டு அரசாங்கம் பல நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளது. சவுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல தடை, தனியார் துறை சார்ந்த அனைத்து தொழில்களும் தற்காலிக நிறுத்தம், உம்ரா எனும் புனிதப்பயணம் நிறுத்தம், பொதுமக்களின் போக்குவரத்திற்குப் பயன்படும் டாக்ஸி, பேருந்து, ரயில் உட்பட அனைத்து போக்குவரத்தும் நிறுத்தம் போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குவைத் :
குவைத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி, அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் தற்பொழுது குணமடைந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் குவைத் நாடே முதன் முதலில் கொரோனா பாதிப்பையொட்டி வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு வருவதற்கு தடை விதித்த நாடாகும்.
அந்நாட்டில் கொரோன வைரஸ் தொடர்ந்து பரவுவதால் அதற்கு தடுப்பு நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், மசூதிகள் என அனைத்தும் மூடப்பட்டன. மேலும், இந்த மாதம் இறுதி வரையிலும் குவைத்தில் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. பொது மக்கள் யாரும் கூட்டமாக ஒன்று கூட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் தற்பொழுது குவைத் நாட்டில் மூடப்பட்டுள்ள பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஆகஸ்ட் மாதம் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கத்தார் :
கத்தார் நாட்டில் இதுவரை 470 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கத்தார் நாட்டில்தான் மற்ற அனைத்து வளைகுடா நாடுகளைக் காட்டிலும் அதிகம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் தற்பொழுது குணமடைந்துள்ளனர்.
கத்தாரின் தோஹா நகரில் இருக்கும் தொழில்துறை பகுதியிலேயே அதிகளவு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் ஃபிஃபா உலகக் கோப்பை 2022 (FIFA Worldcup 2022) உள்கட்டமைப்பு திட்டங்களில் பணிபுரிந்து வந்தவர்கள் ஆவார்கள். தற்பொழுது அவர்களால் அங்கிருந்து வெளியேற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.
கத்தாரில் கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொண்ட வண்ணமே உள்ளன. இந்நிலையில், தற்பொழுது கத்தார் நாட்டு குடிமக்கள் 10 பேரை கத்தார் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் எனவும் விதிகளை மீறி வெளியே நடமாடியதால் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரைன் :
பஹ்ரைனில் இதுவரை 305 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 125 பேர் குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை பஹ்ரைன் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நாட்டு அரசாங்கம் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சினிமா தியேட்டர்களை மூடுதல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்க அறிவுறுத்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் பஹ்ரைன் அரசு பொதுமக்களை தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
ஓமன் :
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் இதுவரை 52 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஓமன் மேற்கொண்டுள்ளது.
சுற்றுலா விசாக்கள் வழங்குவதை ரத்து செய்தல் மற்றும் அனைத்து விளையாட்டு நிகழ்வுகளையும் நிறுத்துதல், ஓமனின் துறைமுகங்களுக்கு சுற்றுலா கப்பல்கள் நுழைவதை தடை செய்தல் ஆகியவை அவற்றில் அடங்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலதிக அறிவிப்பு வரும் வரை அனைத்து பொது போக்குவரத்து சேவைகளையும் ஓமன் அரசாங்கம் தற்பொழுது நிறுத்தி வைத்துள்ளது.