இந்தியாவில் கொரோனா வைரஸின் தற்போதைய நிலை!!
உலகையே உலுக்கி வரும் கொரோனா எனும் கொடிய நோய் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த வாரம் வரை, 3 பேர் மட்டுமே இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த ஒரு வாரத்திற்குள் கொரோனா வைரஸ் நாட்டினுள் அதிவேகமாகப் பரவ ஆரம்பித்து விட்டது. இன்றைய நிலவரப்படி, இதுவரை இந்தியாவில், இத்தாலியில் இருந்து வந்த சுற்றுலாப்பயணிகள் உட்பட 31 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று வரை 30 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று டெல்லியில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சமீபத்தில் தாய்லாந்து மற்றும் மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.
நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரிப்பதால் இந்தியாவில் உள்ள மக்களிடையே இது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பையொட்டி, சுகாதார அமைச்சகம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எளிதில் பரவுவதால் இந்திய சுகாதார அமைச்சகம் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்தே கொரோனா வைரஸ் இந்தியாவிற்குள் பரவுவதால் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. தமிழ் நாட்டிலும் தமிழக பொது துறை சார்பாக கொரோனா நோய்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தேனாம்பேட்டையில் 24 மணி நேர அவசர சேவை மையம் செயல்பட்டு வருகிறது.
Find Your Dream Job Today in UAE/GCC with KHALEEJ TAMIL Jobs Portal
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களின் விவரங்கள் அறியப்பட்டு அவர்களை 28 நாட்கள் வரை தொடர் கண்காணிப்பில் வைத்துக் கொள்கிறது இந்த அவசர சேவை மையக்குழு. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கூறுகையில், கொரோனாவைப் பற்றி தமிழக மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்று கூறியுள்ளார். அதேபோல், தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அறிவித்துள்ளார்.
மேலும் பெரும்பாலான உலக நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியால், பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய யூனியன் சுற்றுப்பயணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் பாதிப்பால் இந்திய பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. அந்நியச் செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 73.99 ரூபாயாக உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு திர்ஹமிற்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு தற்பொழுது 20.14 ரூபாயாக உள்ளது.