கொரோனா வைரஸ் : 24 மணி நேர இலவச மருத்துவ ஆலோசனை… துபாய் சுகாதார ஆணையம் அறிவிப்பு..!!!!!
துபாயில் இருக்கும் அனைவரும் தற்பொழுது துபாய் சுகாதார ஆணையத்தின் (DHA) மருத்துவர்களை வீடியோ மற்றும் குரல் அழைப்புகள் மூலம் இலவசமாக ஆலோசனை பெறுவதற்கு மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான கேள்விகளுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம்.
கடந்த ஆண்டு டிசம்பரில் அதிகாரசபையால் தொடங்கப்பட்ட தனது “ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவர் (Doctor For Every Citizen)” முயற்சி மூலம் DHA இந்த சேவையை வழங்குகிறது.
ஆரம்பத்தில் அமீரக குடிமக்களுக்கு மட்டும் குடும்ப மருத்துவ ஆலோசனைகளை வழங்கிய இந்த முயற்சி, இப்போது கொரோனா வைரசிற்கான இலவச ஆலோசனையை அனைத்து துபாய் குடியிருப்பாளர்களுக்கும் வழங்குகிறது.
DHAவின் ஆரம்ப சுகாதாரத் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி மருத்துவர் மனல் தர்யம் கூறுகையில், “இந்த ஆணையம் டெலிமெடிஸினை (Telemedicine) பயன்படுத்தும். டெலிமெடிஸின் என்பது, ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மற்றும் வீடியோ அழைப்புகள் மூலம் எளிதான வகையில் தொலைதூர மருத்துவ ஆலோசனைகளை, சான்றளிக்கப்பட்ட DHA மருத்துவர்களிடமிருந்து பொதுமக்களுக்கு வழங்கும் செயல்பாடாகும்.
அதிகாரப்பூர்வ ஆதாரங்களில் இருந்து தங்கள் உடல்நல கேள்விகளுக்கு பதில்களை விரும்பும் குடியிருப்பாளர்கள் அல்லது தங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அவற்றை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பும் மக்கள் “ஒவ்வொரு குடிமகனுக்கான மருத்துவர்” சேவையை தொடர்பு கொள்ளலாம்.
இது குறிப்பாக பொதுமக்களுக்கு அவர்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் போது பயனளிக்கும். இதனால் அவர்களது வீடுகளை விட்டு வெளியே வராமலே உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்திற்கும் விளக்கம் பெற முடியும்” என்று டாக்டர் தர்யம் கூறினார்.
பொதுமக்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்கும்போது அவர்கள் உடல்நலம் குறித்து கவனத்துடன் இருக்க வேண்டும், மேலும் அவர்களுக்கு காய்ச்சல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் “ஒவ்வொரு குடிமகனுக்கான மருத்துவர்” முயற்சியைத் தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
“ஒவ்வொரு குடிமகனுக்கான மருத்துவர்” சேவையின் ஆரம்பகட்ட ஆலோசனையையும் (initial consultation), பின்தொடர்வுகளையும் (follow-ups), டெலிஹெல்த் தளத்தின் மூலமாக காணும் பயனாளியின் மருத்துவ பதிவைக் (medical record) கொண்டு மருத்துவர் வழங்குவார். மேலும், மருத்துவர் ஆய்வக மற்றும் கதிரியக்க சோதனைகளையும் (Lab and Radiology test) கோரலாம், அத்துடன் மின்னணு முறையில் மருந்துசீட்டுகளும் (Prescription) வழங்க முடியும்.
இந்த புதிய சேவையின் கீழ், DHA சான்றிதழ் பெற்ற மற்றும் டெலிஹெல்த் பயன்படுத்துவதில் பயிற்சி பெற்ற மருத்துவர்கள், நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களிடம் இருந்து பொதுமக்கள் 24/7 கால ஆலோசனைகள் பெறலாம்.
- இந்த சேவையை அணுக அவர்கள் செய்ய வேண்டியது DHA மொபைல் பயன்பாட்டை டவுன்லோட் செய்து பதிவுபெறுதல் (sign up) மட்டுமே.
- பின்னர் அவர்கள் “ஒவ்வொரு குடிமகனுக்கும் மருத்துவர்” சேவைக்கான ஒரு சந்திப்பை DHA கட்டணமில்லா எண் 800 342 என்ற தொலைபேசி எண்ணில் அழைப்பதன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.
- மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள், வீடியோ அழைப்பு அல்லது குரல் அழைப்புகளின் மூலமாக ஆலோசனைகளைப் பெறலாம்.