அமீரக செய்திகள்

கொரோனா எதிரொலி..!!! “DUBAI EXPO 2020” ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க வாய்ப்பு..!!!

உலகளவில் கொரோனா வைரஸ் மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாய் இருக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தையொட்டி பல்வேறு நாடுகளில் நடக்கவிருந்த பல முக்கிய நிகழ்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன் வரிசையில் தற்பொழுது உலகமே மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவிருந்த துபாய் எக்ஸ்போ 2020, கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி ஒரு வருடம் வரை ஒத்தி வைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் மற்றும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் வெளிநாடுகளின் அதிகாரிகள் அடங்கிய எக்ஸ்போ 2020 வழிநடத்தல் குழு, திங்கள் கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது துபாய் எக்ஸ்போ 2020க்கான ஒத்திவைப்பு பற்றி கலந்தாலோசித்ததாக தெரிகிறது. இந்த முடிவானது, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு 11 மில்லியன் வெளிநாட்டு பார்வையாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள் என்று இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் மதிப்பிட்டிருந்தனர். இதில் 192 நாடுகளைச் சேர்ந்த கலாச்சார, வணிக மற்றும் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தவும் மற்றும் இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்வுகள் நடைபெறவும் திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த வருடம் அக்டோபர் 20 முதல் 2021 ஏப்ரல் 10 வரை நடக்கவிருந்த எக்ஸ்போ 2020, தற்பொழுது ஒரு வருட காலம் ஒத்திவைப்பது குறித்து பியூரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் (Bureau International des Expositions,BIE) இன் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


BIE, இப்போது அதன் உறுப்பு நாடுகள் மற்றும் எக்ஸ்போ 2020 துபாய் அமைப்பாளர்களுடன் இணைந்து எக்ஸ்போ 2020 நடத்துவதற்கான மறுதேதி குறித்து ஆலோசிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. எனினும் ஒத்திவைப்பது குறித்த இறுதி முடிவை BIE இன் நிர்வாகக் குழு மற்றும் பொதுச் சபை (Expo Governing Body) மட்டுமே எடுக்க முடியும். BIE மாநாட்டின் 28 வது பிரிவின் படி, தேதிகளை மாற்றுவதற்கு அமைப்பின் உறுப்பு நாடுகளிலிருந்து மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!