ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளம் கட்..!!! Flydubai அதிரடி அறிவிப்பு..!!!

துபாய் : கொரோனா வைரஸின் தாக்கத்தால் 2020 ஏப்ரல் முதல் மூன்று மாதங்களுக்கு ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கப்போவதாக துபாயை மையமாகக் கொண்டு இயங்கும் பட்ஜெட் கேரியர் ஏர்லைன்ஸ் நிறுவனமான ஃப்ளைதுபாய் (Flydubai) திங்களென்று தெரிவித்துள்ளது.
கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மார்ச் 24 செவ்வாய்க்கிழமை முதல் ஏப்ரல் 7 செவ்வாய்க்கிழமை வரை இரண்டு வாரங்களுக்கு விமான நிறுவனம் தனது அனைத்து சர்வேதேச விமான போக்குவரத்து சேவைகளையும் நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “கொரோனா வைரஸானது ஃப்ளைதுபாய் உள்ளிட்ட விமான மற்றும் சுற்றுலாத் துறைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் இதன் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி அதன் நிலைமைக்கு ஏற்ப விமான நிறுவனமும் தன் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டியிருந்தது மற்றும் ஊழியர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் பொருட்டு 2020 ஏப்ரல் முதல் மூன்று மாதங்களுக்கு ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். எனினும் எத்தனை சதவீதம் சம்பளம் குறைக்கப்படும் என்பதை பற்றி நிறுவனம் வெளியிடவில்லை.
மேலும் “இந்த முடிவு அவ்வளவு எளிதாக எடுக்கப்படவில்லை. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளில் ஊழியர்களுக்கு நிலைத்தன்மையை வழங்குவதற்கும், சாதாரண வாழ்க்கை முறை சீர்குலைந்தால் அதன் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த நடவடிக்கைகள் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவினரால் கனத்த மனதுடன் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் எங்கள் ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்வதோடு, வழக்கமான அட்டவணையுடன் விமான போக்குவரத்துக்கு மீண்டும் தொடங்கும் போது நாங்கள் சிறந்த இடத்திற்கு முன்னேறுவோம்” என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மார்ச் 25 முதல் விமான பயணிகளின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திய பின்னர் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் சம்பளக் குறைப்பை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.