குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வு!!
குவைத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் குவைத்தின் அரசு ஊழியர்கள் அனைவரும் அந்நாட்டின் அமைச்சக வளாகத்திற்குள் இன்று காலை கொரோனா வைரஸ் சோதனைக்காக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
குவைத் தேசிய விடுமுறை நாட்கள் முடிந்து பணிக்கு வந்த அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை செய்யப்படும் இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோவானது சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கடந்த ஒரு வாரமாக கொரோன வைரஸ் மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், குவைத் சுகாதார அமைச்சகம் இன்று மேலும் ஒரு கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் நபரைக் கண்டறிந்துள்ளதால், குவைத்தில் இந்த வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட அனைவரும் கடந்த இரு வாரங்களில் ஈரானுக்கு பயணம் செய்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பைத் தொடந்து குவைத்தில் உள்ள குடிமக்கள் அனைவரும் தனது வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்குமாறு குவைத் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு அழைப்பு விடுத்ததாக சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் சனிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஈரான் மற்றும் தாய்லாந்தில் இருந்து குவைத் நாட்டின் மக்களை ஏற்றிக்கொண்டு ஆறு விமானங்கள் குவைத் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளன.