அபுதாபியில் குறைந்த பட்ஜெட்டிலான விமான போக்குவரத்து சேவை தொடக்கம்… விஸ் ஏர் அபுதாபி!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியில் புதிய விமான சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தம் இன்று அமீரகம் மற்றும் ஐரோப்பா நாட்டு நிறுவனங்களுக்கு இடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தமானது அபுதாபி டெவலப்மென்டல் ஹோல்டிங் கம்பெனி (ADDH ), மற்றும் ஐரோப்பாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் மற்றும் சுற்றுசூழலுக்கு உகந்த விமான நிறுவனமான விஸ் ஏர் ஹோல்டிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டதாக ADDH தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் அபுதாபியின் குறைந்த பட்ஜெட் கொண்ட ஏர்லைன்ஸ் ஆக விஸ் ஏர் அபுதாபி (WIZ AIR ABUDHABI) தனது சேவையை 2020 ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் தொடங்க உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரை மையமாகக் கொண்ட புதிய அமீரகத்தின் குறைந்த கட்டணம் கொண்ட விமான நிறுவனமான விஸ் ஏர் அபுதாபியை (WIZ AIR ABUDHABI) அறிமுகப்படுத்தும் இந்த ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இதன் மூலம், ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள பல இடங்களுக்கு குறைந்த கட்டங்களில் உயர் தர சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
விஸ் ஏர் அபுதாபியின் ஆள் சேர்ப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் மாதங்களில் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் மற்றும் அபுதாபிக்கு அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு அபுதாபியின் 50 பில்லியன் டாலர் திட்டமான காதன் 21 (GHADAN 21) உடன் ஒத்துப்போகிறது, இது வணிக, புதுமை மற்றும் மக்கள் முதலீடு செய்வதன் மூலம் அமீரகத்தின் வளர்ச்சியை மேலும் உயர்த்தும் என்பதில் எந்த வித ஐய்யமும் இல்லை..
இந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, விமான மேம்பாட்டுக் குழு ஏற்கனவே யுஏஇ பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்துடன் புதிய விமான சேவைக்கான ஏர் ஆபரேட்டர் சர்டிபிகேட் மற்றும் லைசென்ஸைப் பெறுவதற்கான செயல்முறையைத் தொடங்கியுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து ADDH இன் தலைமை நிர்வாக அதிகாரி முஹம்மது ஹசன் அல் சுவைதி கூறுகையில், “அபுதாபியின் வளர்ச்சியில் சுற்றுலா துறைக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. இந்த முதலீடானது நமது விமான நிலையங்களுக்கு மட்டுமல்லாமல், ஹோட்டல், ரிசார்ட்ஸ் மற்றும் கலாச்சார இடங்கள் உள்ளிட்ட சுற்றுலா உள்கட்டமைப்புகளுக்கும் செல்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் அமீரகத்திற்கு, 11.35 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.. எனவே இந்த திட்டமானது, இனி வரும் காலங்களில் அமீரகத்திற்கு வரும் பார்வையாளர்களுக்கு மிக மலிவான விலையிலும், எளிதிலும் அபுதாபிக்கு வருவதற்கான வழியை வகுக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. எங்களின் இந்த கூட்டுமுயற்சியானது ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமான அபுதாபியை மிகவும் போட்டி நிறைந்த பிராந்தியமாக உயர்த்த உதவும். மேலும் இது அபுதாபியை வணிகப்பயணிகளுக்கும் ஓய்வு நேரங்களைக் கழிக்க விரும்புபவர்களுக்கும் ஒரு சிறந்த சர்வதேச
இடமாக மாற்றும் ” என்றும் கூறினார்.
இது பற்றி விஸ் ஏர் ஹோல்டிங்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஜோசப் வரடி கூறுகையில், “அபுதாபியில் எங்கள் புதிய விமான சேவையை நிறுவுவதற்கான பாதையில், இன்று ஒரு முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளோம். அபுதாபியின் விமான வளர்ச்சியை உயர்த்துவதற்காக பொருளாதார ரீதியாகவும் செயல் ரீதியாகவும் மிகவும் திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விமான மாதிரியைக் அர்ப்பணித்துள்ளோம். அபுதாபியின் சுற்றுலா மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையை வளர்ப்பதன் பயனாக இந்த ஒப்பந்தத்தை உருவாக்குவதன் மூலம் நாங்களும் பெருமை அடைகின்றோம்” என்று கூறினார்.
விஸ் ஏர் தனது விமான சேவையை ஏற்கனவே தனது விமான சேவை பயன்பாட்டில் இருக்க கூடிய நகரங்களுக்கும், அதிகளவு பயணிகளை கொண்ட நகரங்கள், மத்திய மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு ஐரோப்பாவைக் கொண்ட சந்தைகளுக்கும் தனது விமான சேவையை விரிவு செய்வதில் விமான நிறுவனம் கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது.