மலேசியாவில் அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் கொரோனா..!!! 2,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..!!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், உலகளவில் 4 இலட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20,000 க்கும் மேலானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கொடிய உயிர்கொல்லி நோயாக கருதப்படும் கொரோனா வைரஸிற்கு பல நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும் வேளையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஒன்றான மலேசியாவிலும் கொரோனா தன் பாதிப்பை மிக அதிதீவிரமாகக் காட்டிவருகிறது. தற்போதைய நிலவரப்படி, இன்று மட்டுமே 235 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மலேசியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,031 ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் இதுவரை 23 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக,மலேசிய அரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை (Movement Control Order) மார்ச் 18ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை அறிவித்திருந்தது. தற்பொழுது கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருவதால், இந்த ஆணையை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டிக்க போவதாக உத்தரவிடப்பட்டுள்ளது என்று மலேசிய பிரதமர் முகைதீன் யாசீன் அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை (MCO) தற்பொழுது மேலும் இரு வாரங்களுக்கு நீடித்துள்ளதால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். கூடுதலாக, இந்த நடவடிக்கை இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுப்பொருட்களை சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், நாட்டில் உணவுப்பொருட்கள் தேவையான அளவு இருக்கிறதென்றும் பிரதமர் யாசீன் அவர்கள் அறிவித்துள்ளார்.
மேலும், அந்நாட்டிலுள்ள அனைத்து மசூதிகள் மற்றும் இறைவழிபாட்டு இடங்களிலும் இறைவணக்க வழிபாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (MCO) காலம் முடியும் வரையிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நாட்டின் முக்கியமான பொது இடங்கள் மற்றும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் சுத்திகரிப்புப் பணிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.