UAE : அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் மூன்று நாட்களுக்கு நிறுத்தம்…!!! பொதுமக்கள் வெளியே நடமாட தடை..!!!

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, அமீரகத்தில் இருக்கும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான இடங்கள், வீதிகள், பொது போக்குவரத்து மற்றும் மெட்ரோ ஆகியவற்றை சுத்திகரிக்க மூன்று நாள் தேசிய சுத்திகரிப்பு திட்டம் மேற்கொள்ளப்படும் என சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை நடைபெறும் இந்த சுத்திகரிப்பு திட்டம், சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்தால் அனைத்து தொடர்புடைய மத்திய மற்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் நேரங்களில், நாடு முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்படும் என்றும் மெட்ரோ சேவைகள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்கள், சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சமயங்களில் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் உணவு, அடிப்படை அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்குவதைத் தவிர வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது. முக்கியத் துறைகளான எரிசக்தி, தகவல் தொடர்பு, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் காவல்துறை, ராணுவம், கப்பல் போக்குவரத்து, மருந்தகங்கள், நீர் மற்றும் உணவுத் துறை, சிவில் விமான போக்குவரத்து, விமான நிலையங்கள், நிதி மற்றும் வங்கி, அரசு ஊடகங்கள் மற்றும் எரிவாயு நிலையங்களை உள்ளடக்கிய சேவைத் துறை போன்ற முக்கிய துறைகளில் பணிபுரிபவர்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவித்துள்ளது.
மேலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நாட்களில் உணவு நிலையங்கள், மளிகை பொருட்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் ஆகியவை செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.