அமீரகத்தில் வானிலை நிலவரங்களைக் கண்காணிக்கும் புதிய ஸ்மார்ட் கேட்!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் புதிதாக ஸ்மார்ட் கேட் ஒன்று நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது. சாலைப் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்களை தெரிவு செய்து அபராதம் அளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை முதல் அபுதாபியில் புதிய ஸ்மார்ட் கேட் செயல்படுத்தப்படும் என்று அபுதாபி காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, வானிலை நிலவரங்களைக் கண்காணிக்கும் வகையில் இந்த ஸ்மார்ட் கேட் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் கேட் முதலில் அல் அய்ன்-அபுதாபி சாலையில் செயல்படுத்தப்படும். இதில் நிறுவப்பட்ட ரேடார்கள் வேக வரம்பை மீறுதல், அங்கீகரிக்கப்படாத கனரக வாகனங்கள், போதுமான பாதுகாப்பு தூரத்தை கடைபிடிக்காமல் ஓட்டப்படும் வாகனங்கள், பெர்மிட் முடிந்த வாகனங்கள், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்துதல் மற்றும் இது போன்ற சாலை விதிமீறல்களைக் கண்டறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்கள் திரையில் காண்பிக்கப்படும் வேகத்தையே கடைபிடிக்குமாறு அபுதாபி காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அபுதாபி காவல்துறை பொதுத் தலைமையகத்தின்படி, புதிதாக நிறுவப்பட்ட ஸ்மார்ட் கேட் வானிலை நிலவரங்களைக் கண்காணித்து உடனடியாக செயல்பாட்டு அறைக்கு சமிக்ஞைகளை அனுப்பும். அந்த நேரத்தில் வானிலை மற்றும் தெரிவுநிலைக்கு ஏற்ப, சாலையின் வேக வரம்பு சரிசெய்யப்பட்டு ஸ்மார்ட் கேட்டில் காண்பிக்கப்படும்.
நிலையற்ற வானிலை காலங்களில் ஸ்மார்ட் கேட் டவர் வழியாக அனுப்பப்படும் தகவல்களை வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும், அபுதாபி காவல்துறையினரால் வானொலி நிலையங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் கூறப்படும் எச்சரிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், காவல்துறையின் ஸ்மார்ட் கேட் சிஸ்டம் மூலம் வழங்கப்படும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டுனர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஸ்மார்ட் கேட் சாலை விபத்துகளை குறைக்கவும், ஓட்டுநர்கள் மற்றும் சாலையை பயன்படுத்துபவர்களுக்கு பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.