அமீரகத்தின் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் தடை…!!! கொரோனா எதிரொலி..!!!!
கொரோனா வைரசிற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் வணக்க வழிபாடுகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் இஸ்லாமிய அமைச்சகம் மற்றும் அவ்காஃப் பொது ஆணையம் ஆகியவை ஒருங்கிணைந்து திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் நான்கு வாரங்களுக்கு நாட்டின் மசூதிகள் மற்றும் பிற வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மசூதிகள், தேவாலயங்கள், கோவில்கள் மற்றும் பிற வழிபாட்டுத்தலங்களில் இறைவணக்கங்களை நிறுத்தும் இந்த முடிவானது நான்கு வாரங்களுக்குப் பிறகு மதிப்பாய்வு செய்யப்படும்.
கொரோனா வைரஸிற்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களின் நலனுக்காக குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களை இந்த அறிவிப்புக்கு இணங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இதே போன்று, சில தினங்களுக்கு முன்னதாக குவைத் நாட்டில் கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வழிபாட்டுத்தலங்களில் இறைவழிபாடுகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.