சவுதி அரேபியாவைத் தொடர்ந்து கத்தாரிலும் வெளிநாட்டவருக்குத் தடை!!!
சவுதி அரேபியாவைத் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரும் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு தற்காலிகத் தடை விதித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, எகிப்து, ஈரான், ஈராக், லெபனான், பங்களாதேஷ், நேபாளம், பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, சிரியா, தாய்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய 15 நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கத்தார் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
இதில், கத்தார் ஏற்கெனவே இத்தாலிக்கு செல்லும் விமானங்களை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகளில் சீனாவுக்கு அடுத்த படியாக இத்தாலியே கொரோனாவின் பாதிப்பால் அதிக மனித இறப்புகளை சந்தித்துள்ளது.
கொரோனாவின் பாதிப்பையொட்டி, அனைத்து பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் நாளை (செவ்வாய்க்கிழமை) மூடப்படும் என்று கத்தார் அரசாங்கம் அறிவித்ததாக அல் அரேபியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுடன் விமானங்களை நிறுத்தியுள்ளதால் கத்தாரிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வார தொடக்கத்தில், கத்தார் அரசாங்கம் கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் முயற்சியாக கத்தாரின் குடிமக்களுக்கும் வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களுக்கும் கத்தார் நாட்டிற்குள் நுழைய மற்றும் கத்தாரில் இருந்து மற்ற அண்டை நாடுகளுக்கு செல்ல அடையாள அட்டைக்கு பதில் பாஸ்போர்ட்டை பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக, தற்பொழுது 15 நாட்டவர்கள் கத்தார் நாட்டிற்குள் நுழைய தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கத்தார் நாட்டில் கொரோனா வைரஸால் மேலும் 3 பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கத்தாரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருக்கிறது.