வளைகுடா செய்திகள்

சவுதி அரேபியா : இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகளுக்கு விமான சேவை ரத்து!!!

சவூதி அரேபியாவில் ஒரே இரவில் 24 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சவூதி அரேபியா இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கான விமான சேவைகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சவுதி அரசாங்கம் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களின் பயணங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது, மற்றும் பல நாடுகளுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது என்று உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், சுவிட்சர்லாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பிலிப்பைன்ஸ், சூடான், எத்தியோப்பியா, தென் சூடான், எரிட்ரியா, கென்யா, ஜிபூட்டி மற்றும் சோமாலியா போன்ற நாடுகள் அடங்கும். மேற்கூறிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் சவூதி அரேபியாவில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!

Subscribe

சவூதி அரேபிய குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் சவூதி அரேபியா தடை செய்த நாடுகளில் இருந்தால் அவர்கள் 72 மணி நேரத்திற்குள்ளாக சவூதி அரேபியாவிற்கு திரும்ப வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளதாக சவூதி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் சவுதி அரேபியா ஜோர்டான் நாட்டுடன் தொடர்பு கொண்டிருக்கும் அனைத்து சாலைகளிலும் பொதுமக்கள் பயணிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வணிக மற்றும் சரக்கு போக்குவரத்து இன்னும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் வர்த்தகப் பயணங்களில் தேவையான முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த பயணத்தடை அந்நாட்டில் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியாவிலிருந்து வேலை செய்யும் மருத்துவ ஊழியர்களுக்கு பொருந்தாது.

சவுதி அரசாங்கம் ஏற்கனவே, அண்டை அரபு நாடுகள் உட்பட சுமார் 19 நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு தடை விதித்திருந்தது. மேலும் அந்நாட்டிற்கு நுழையும் பயணிகளில் சுகாதார தகவல்கள் மற்றும் பயண விவரங்களை வெளியிடாத நபர்களுக்கு 5,00,000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!