சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 205 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!! ஒருவர் உயிரிழப்பு..!!!

சவுதி அரேபியாவில், கொரோனா வைரஸால் பாதிப்படைந்து முதலாவதாக ஒருவர் இறந்துள்ளார். சவுதி அரசின் சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியில், வைரஸ் பாதித்து உயிரிழந்த நபர் சவுதி அரேபியாவில் உள்ள மதினாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ளது. மேலும், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரே நாளில் 205 பேர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 767 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Spokesperson of the Health Ministry announces 205 new cases of #Coronavirus (#COVID19).
— SPAENG (@Spa_Eng) March 24, 2020
கொடிய வைரஸான கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த சவூதி அரேபியா திங்கள்கிழமையில் இருந்து 21 நாட்களுக்கு மாலை முதல் மறுநாள் காலை வரையிலான நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சியாக, சவுதி அரேபியாவில் உள்ள ஷாப்பிங் மால்கள், ரெஸ்டாரண்ட், சினிமாக்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. மேலும், உம்ரா எனும் புனிதப்பயணத்தையும் தற்பொழுது சவுதி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஜிஸ், வியாழக்கிழமை வைரஸுக்கு எதிரான “மிகவும் கடினமான” போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எச்சரித்தார். ஏனெனில் வைரஸ் தலைமையிலான பணிநிறுத்தங்கள் மற்றும் எண்ணெய் விலைகளின் வீழ்ச்சி சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்திருப்பதாகவும் கூறினார்.
கடந்த வாரம், சவுதி அரசாங்கம் வணிகங்களை ஆதரிப்பதற்காக 120 பில்லியன் ரியால்கள் (32 பில்லியன் டாலர்) ஊக்க நடவடிக்கைகளை வெளியிட்டது. மேலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product-GDP) 50 சதவீதத்திற்கு கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
வளைகுடாவில் உள்ள பிற நாடுகளிலும் இதேபோன்ற கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 2,100 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகள் வளைகுடா நாடுகளில் பதிவாகியுள்ளன.
ஓமனில், மார்ச் 29 முதல் அனைத்து பயணிகள் விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக அமைச்சகம் கூறியுள்ளது. மற்றொரு வளைகுடா நாடான பஹ்ரைனில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, மூன்று பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். குவைத்தில் இதுவரை 191 பேருக்கு வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு கொரோனா பரவுவதை எதிர்த்து ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.