கொரோனா வைரஸ் : உலகப் புகழ்பெற்ற “தாஜ்மஹால்” தற்காலிகமாக மூடல்
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் இந்தியாவிலும் பல பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் பரவி வரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த இந்திய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் இது வரை 129 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இதுவரை வைரஸால் இறந்துள்ளனர்.
எனவே, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கடுமையான சோதனை இடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்தியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான தாஜ்மஹால் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி பார்வையாளர்கள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமையில் (இன்று) இருந்து இந்த மாதம் இறுதி வரை தடை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்ற மாதம் இறுதியில்தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது மனைவியுடன் தாஜ்மஹாலுக்கு சென்று பார்வையிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்தியாவில் இருக்கும் அனைத்து புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களும் அருங்காட்சியகங்களும் இந்த மாதம் இறுதி வரை மூடப்படும் என்றும் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. கொரோனா வைரசிற்கான தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதையொட்டி இந்த முடிவு எடுத்துள்ளதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.