மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வர தடை…!!! மத்திய அரசு அறிவிப்பு…!!!
உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய கொரோனா எனும் கொடிய வைரஸானது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை, இந்தியாவில் 120 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இரண்டு பேர் இந்த வைரஸால் இந்தியாவில் இறந்துள்ளனர். தற்பொழுது மூன்றாவதாக கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கர்நாடகாவை சேர்ந்த ஒருவரும், டெல்லியை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ள நிலையில் தற்பொழுது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 64 வயது முதியவர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை மூன்று நபர்கள் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இந்தியா முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன.
ஏற்கெனவே இந்தியா ஐரோப்பா, துருக்கி, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு பயணத்தடையும், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஓமன் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய தனிமைப்படுத்தலையும் அறிவித்த நிலையில், தற்பொழுது மலேசியா, பிலிப்பைன்ஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் இந்தியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நாடுகளில் இருந்து விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு வைரஸ் பாதிப்பின் அச்சுறுத்தலால், உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நாடுகளுக்கு செல்ல பயணக்கட்டுப்பாடுகள் விதித்தும், மற்ற நாடுகளுக்கு பயணத்தடையும் அறிவிப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.