மார்ச் 29 முதல் UAE முழுவதும் பிரைவேட் செக்டார்க்கு “Work From Home” நடைமுறை..!!! 30 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அலுவலகத்தில் பணிபுரிய அனுமதி..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதை முன்னிட்டு பல்வேறு நடவடிக்கைகளை அமீரக அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் ஒரு பகுதியாக, தற்பொழுது அமீரகத்தின் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (Ministry of Human Resources and Emiratisation) அமீரகத்தில் இருக்கும் ஒவ்வொரு தனியார் நிறுவனத்திலும் அதிகபட்சமாக 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்தில் இருந்து வேலை செய்ய வேண்டும் என அனுமதி அளித்துள்ளது. மீதமுள்ள ஊழியர்களுக்கு “Remote Work System” முறையை செயல்படுத்தலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த முடிவானது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமீரக அரசால் தொடங்கப்பட்ட “Remote Work System” என்ற நடைமுறையின் மூலம் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
As part of the preventive measure taken to stop the spread of coronavirus, HE Nasser bin Thani Al Hamli, Minister of #MOHRE, issued a new decree on regulating remote work in the private sector. The decree will be operational from 29 March and for 2 weeks extendable. pic.twitter.com/jE8h8CIz2g
— MOHRE_UAE وزارة الموارد البشرية والتوطين (@MOHRE_UAE) March 26, 2020
இந்த நடவடிக்கையானது மார்ச் 29 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி இரு வாரங்களுக்கு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறையானது தேவைப்படும் பட்சத்தில் மதிப்பீடு மற்றும் மதிப்பாய்விற்கு உட்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கைகளில் ஒரு பகுதியாக வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை (Work From Home) தனியார் நிறுவனங்களில் செயல்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சர் நாசர் பின் தானி அல் ஹமிலி அறிவித்துள்ளார். மேலும், தொலைநிலை பணி முறை (Remote Work System) தேசிய அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் (National Emergency, Crisis and Disaster Management Authority) ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தனியார் துறையை சார்ந்த சேவை மையங்களும் தங்களின் நிறுவனத்திற்கு வருகைதர கூடிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையின் சதவீதத்தை 30 சதவீதத்திற்கு மிகாமல் குறைப்பதன் முக்கியத்துவத்தையும், வாடிக்கையாளர்களிடையே போதுமான சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட சுகாதார விதிமுறைகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் தனியார் நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் அலுவலகங்கள் மற்றும் அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் சாதனங்கள், கருவிகள் அனைத்திலும் குறிப்பிட்ட இடைவெளியில் தூய்மையை பேண வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவானது உள்கட்டமைப்பு திட்டங்கள், கேட்டரிங் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, எரிசக்தி, சுகாதாரம் மற்றும் வங்கித் துறைகள், அத்துடன் உணவுத் தொழில்கள், விருந்தோம்பல் சேவைகள், சுகாதாரப் பொருட்கள் உற்பத்தி மற்றும் துப்புரவு நிறுவனங்கள் உள்ளிட்ட வணிக நடவடிக்கைகளுக்கு விலக்கு அளிக்கிறது.
தனியார் நிறுவங்கள் தங்களின் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொரோனா வைரஸிற்கான அறிகுறிகளுடன் தென்பட்டாலோ அல்லது கொரோனா வைரஸ் பதிப்பிற்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கண்டறியப்பட்டாலோ உடனே சம்பந்தப்பட்ட துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொல்லப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு நேரடி தொடர்பில் சேவை வழங்குபவர்கள் மற்றும் வீடுகளுக்கு பொருட்கள் கொண்டு செல்வபவர்களும் அரசால் அறிவுறுத்தப்பட்ட சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.