அமீரகத்தில் வசிப்பவர்கள் வெளிநாடு செல்ல வேண்டாம்.. சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!!

கொரோனா வைரஸ் தொற்று பல நாடுகளுக்கு பரவியுள்ளதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சகம் நாட்டு குடிமக்களுக்கும் மற்றும் இந்நாட்டில் வசிக்கும் மற்ற நாட்டவர்களுக்கும் வெளிநாடுகளுக்கு செல்லும் பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், பயணம் அவசியமெனில் பயணிகள் வெளிநாடுகளுக்குச் சென்று, மீண்டும் அமீரகம் திரும்பும் போது முறையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பே அவர்கள் நாட்டிற்குள் நுழைய முடியும் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பயணிகள் திரும்பியவுடன் செய்யப்படும் மதிப்பீடுகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. பயணிகள் நாடு திரும்பியவுடன் விமான நிலையத்தில் மருத்துவப்பரிசோதனைகள் எடுக்கப்பட்டு அவர்கள் வைரஸால் பாதிக்கப்படவில்லை என உறுதி செய்யும் வரையில் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். ஒரு வேளை வைரஸ் தொற்று இருப்பின் அவர்கள் சுகாதார முறையில் தனிமைப்படுத்தப்பட்டு மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படும் என சுகாதார அமைச்சகம் அறிவிப்பு செய்துள்ளது.
பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுவதற்காக துபாய் ஏர்போர்ட்டில் புதிதாக ஏழு வாயில்கள்(Gate) திறக்கப்பட்டுள்ளன. துபாய் ஏர்போர்ட்டின் டெர்மினல்-3 ல் 6 வாயில்கள் மற்றும் டெர்மினல்-1 ல் ஒரு வாயில் என மொத்தம் ஏழு வாயில்கள் வழியாக வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் இதில் வைக்கப்பட்டுள்ள தெர்மல் ஸ்க்ரீனிங் கேமரா மூலம் பரிசோதிக்கப்படுவார்கள்.
அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவுவதால் உலக சுகாதார அமைப்பு (WHO) உலகெங்கிலும் அவசரகால நிலையை அறிவித்ததிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம் சர்வதேச சுகாதாரத் தரங்களுக்கு ஏற்ப அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று ஆறு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கபட்டுள்ளதாகவும் புதன்கிழமை இரு நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவு செய்துள்ளனர். இது நாட்டில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையை 29 ஆக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.