கொரோனா வைரஸ்: அமீரக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஒரு மாத காலம் விடுமுறை… கல்வி அமைச்சகம் அறிவிப்பு!!
கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி ஒரு மாதத்திற்கு மூடப்படும் என்று கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மார்ச் 29 ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 ம் தேதி வரை அளிக்கப்பட இருந்த ஸ்பிரிங் ஹாலிடேஸ் கொரோனா வைரஸின் தாக்கத்தைத் தொடர்ந்து, இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே அதாவது மார்ச் 8 ம் தேதி முதல் ஒரு மாத காலம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இரண்டு வாரங்கள் விடுமுறையாகவும், மீதமுள்ள இரண்டு வாரங்கள் மாணவர்கள் வீட்டிலிருந்து பயிலக்கூடிய வகையில் தொலைதூரக் கல்வி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அனைத்து பள்ளி, பேருந்துகள், வகுப்பறைகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் “சுத்தப்படுத்துதல் மற்றும் நோய்க்கிருமிகளை ஒழித்தல் திட்டம்” மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், மாணவர்களையும் நிச்சயம் பாதிக்கும். எனினும் “மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக” இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது அவர்களின் சிறந்த நலனுக்காகவே என்றும் கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் சோதனை திட்டமாக தொலைதூர கற்றல் திட்டத்தின் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்தே இணையவழி முறையில் கல்வி பயில்வதற்கு ஏதுவாக ஆசிரியர்களையும் மாணவர்களையும் தயார் செய்யும் திட்டம் இருப்பதாகவும் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.