UAE : பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தம்..!!! மார்ச் 25 முதல் அமல்..!!!
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தில், அமீரகத்திற்கு வரும் மற்றும் அமீரகத்திலிருந்து செல்லும் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் மற்றும் ட்ரான்ஸிட் விமானப் பயணிகளின் சேவைகளையும் (transit of airline passangers) இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க தேசிய அவசர மற்றும் நெருக்கடி மற்றும் பேரழிவு மேலாண்மை (The National Emergency and Crisis and Disasters Management) மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (Civil Aviation Authority-CAA) முடிவு செய்துள்ளன.
மறு மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்படும் இந்த முடிவானது 48 மணி நேரத்தில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் (MoHAP) பரிந்துரைகளின்படி, ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு சரக்கு மற்றும் அவசரகால வெளியேற்ற விமானங்களுக்கு இந்த நடவடிக்கையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று ஒரு அறிக்கையில் CAA தெரிவித்துள்ளது.
“பயணிகள், விமானத்தில் வேலை செய்யும் பணியாளர்கள் மற்றும் விமான நிலையப் பணியாளர்களின் பாதுகாப்பையும், தொற்று அபாயங்களிலிருந்து அவர்கள் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்டால் கூடுதல் பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தும் ஏற்பாடுகள் பின்னர் மேற்கொள்ளப்படும்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.