UAE : முக கவசம் மற்றும் கையுறைகளை சாலைகளில் வீசினால் 1,000 திர்ஹம் அபராதம்..!!! காவல்துறை எச்சரிக்கை..!!!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பையொட்டி முக கவசம் (face mask) மற்றும் கையுறை (gloves) அணியும் பழக்கம் அனைத்து மக்களுக்கும் வந்து விட்டது. வீட்டில் இருந்து வெளியேறினால் முக கவசம் மற்றும் கையுறை இல்லாமல் யாரும் செல்வதில்லை. பல நாடுகளில் இந்த பழக்கம் கட்டாயமாக்கப்பட்டதோடு, இதனை அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு தண்டனைகள் வழங்கப்படும் என்றும் பல்வேறு நாடுகள் எச்சரித்துள்ளது. இதே போல், அமீரகத்தில் தொடர்ந்து கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் எனவும் இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்ததும் நாம் அறிந்ததே.
இந்நிலையில், வெளியே செல்லும் நபர்களில் பல பேர் முக கவசம் அணிந்து வெளியே சென்றாலும் தாங்கள் பயன்படுத்திய முக கவசம் மற்றும் கையுறைகளை சாலைகளில் வீசி சென்று விடுகின்றனர். அவ்வாறு செயல்படுபவர்களின் பொறுப்பற்ற தன்மையை கண்டிக்கும் விதமாக அபுதாபி காவல்துறை புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய முககவசம் மற்றும் கையுறைகளை சாலையில் வீசி சொல்வார்களேயானால் அவர்களுக்கு 1000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.
இதனையொட்டி அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற பொறுப்பற்ற நடத்தையில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு 1,000 திர்ஹம் அபராதம் விதிப்பதுடன் மட்டுமல்லாமல் ஆறு கரும்புள்ளிகளும் (traffic points) வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இவ்வாறு தாங்கள் உபயோகப்படுத்திய முக கவசங்களை சாலைகளை வீசி செல்வதால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல் பொதுமக்களின் பாதுகாப்பிறகும் கேடு விளைவிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
முக கவசங்களைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்கான சரியான வழி, அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து கட்டி முறையாக குப்பை தொட்டியில் போடுவதாகும் என்பதை விளக்கும் வீடியோ ஒன்றை அபுதாபி காவல்துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
பயன்படுத்தப்பட்ட முககவசங்கள் மற்றும் கையுறைகளை சாலைகளில் வீசுவதின் மூலமும் சில நேரங்களில், கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரின் பொதுவான பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, முக கவசங்கள் மற்றும் கையுறைகள் போன்ற பொருட்களை வாகனங்களில் இருந்து சாலைகளில் வீசுபவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக பெடரல் போக்குவரத்து சட்டத்தின்படி, 1000 திர்ஹம் அபராதமும் 6 கரும்புள்ளிகளும் (traffic points) விதிக்கப்படும் என்று அபுதாபி காவல்துறை கூறியுள்ளது.
#أخبارنا | #شرطة_أبوظبي تحذر من القاء #الكمامات و #القفازات على الطريق#أخبار_شرطة_أبوظبي#خلك_في_البيت
#stayhomehttps://t.co/vGGdokmBZ1 pic.twitter.com/WrPNYNKSZ5— شرطة أبوظبي (@ADPoliceHQ) April 9, 2020