Shaikh Zayed Road உட்பட 5 முக்கிய சாலைகள் வழியாக அபுதாபி, ஷார்ஜா போன்ற நகரங்களுக்கு செல்ல அனுமதி.!! துபாய் காவல்துறை அறிவிப்பு..!!
துபாயில் தற்பொழுது நடைபெற்று வரும் 24 மணி நேர சுத்திகரிப்பு பணிகளின் போது பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் துபாய் போலீசால் அறிவிக்கப்பட்டுள்ள இணையதளத்தில் அனுமதி பெற்றுக்கொண்டே வெளியேற வேண்டும் என துபாய் போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. மேலும், சாலைகளில் செல்லக்கூடிய வாகனங்களை கண்டறியவும் சாலைகளில் உள்ள ரேடார் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், துபாய் வழியாக அபுதாபி மற்றும் பிற நகரங்களுக்கு செல்ல வேண்டியவர்கள் தற்பொழுது ஷேக் முகமது பின் சையது சாலை மற்றும் பிற நான்கு முக்கிய சாலைகளைப் பயன்படுத்தலாம் என்று துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது.
துபாயில் 24 மணிநேர சுத்திகரிப்பு திட்டத்தின் போது அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு தராமல் வெளியே வருபவர்களை அடையாளம் காண ரோந்து வாகனங்கள், ரேடார்கள் மற்றும் கேமராக்கள் போன்றவை துபாய் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் விதிவிலக்காக துபாயில் உள்ள மற்ற முக்கிய ஐந்து நெடுஞ்சாலைகளின் ரேடார்களில் வாகன கண்காணிப்பிற்கான சிஸ்டம் செயல்படுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலே குறிப்பிட்ட ஐந்து முக்கிய சாலைகளான “ஷேக் சையது சாலை (Sheikh Zayed Road), எமிரேட்ஸ் சாலை (Emirates Road), ஷேக் முகமது பின் சையது சாலை (Sheikh Mohamed Bin Zayed Road), துபாய் அல் அய்ன் சாலை (Dubai Al Ain Road) மற்றும் துபாய் ஹட்டா சாலை (Dubai Hatta Road) போன்றவற்றின் வழியாக ஷார்ஜா, அஜ்மான் போன்ற பகுதிகளில் இருந்து துபாய் வழியாக அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து துபாய் வழியாக ஷார்ஜா போன்ற அமீரகத்தின் மற்ற பிற பகுதிகளுக்கும் செல்லலாம் என்றும் துபாய் காவல்துறை சார்பாக கூறப்பட்டுள்ளது.
இந்த சாலைகளில் உள்ள ரேடார்களில் தேசிய சுத்திகரிப்பிற்கான விதிமீறல்களை (வேகமாக ஓட்டும் வாகனங்களை தவிர) கண்டறியும் சிஸ்டம் செயல்பாட்டில் இருக்காது என்றும், மேலும் அனைத்து வாகன ஓட்டிகளும் அபுதாபி அல்லது அமீரகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறை இயக்குநர் பிரிகேடியர் சைஃப் முஹைர் அல் மஸ்ரூய் (Brigadier Saif Muhair Al Mazroui) அவர்கள் ஒரு நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
இருப்பினும், வாகன ஓட்டிகள் துபாயில் உள்ள வேறு எந்த பகுதியிலும் இந்த வாகனங்களை நிறுத்தாமல் அமீரகத்தின் மற்ற நகரங்களுக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே இந்த சாலைகள் வழியாக செல்ல வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இவர் கூறுகையில், “துபாய் சுத்திகரிப்பு திட்டத்தின் போது பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருப்பது மிகவும் முக்கியம்,” என்று கூறினார். தொடர்ந்து ரேடார்கள் மூலம் பிடிபட்ட தனிநபர்களின் இயக்கத்தை அடையாளம் காணும் திறனும் காவல்துறைக்கு உண்டு என்றும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்க அல்லது மருத்துவமனைக்கு வருகை தரும் நபர்கள் தேவையான ஆதாரங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
துபாய் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளை மீறி வீட்டில் இருக்காமல் வெளியே சுற்றும் நபர்களுக்கு துபாய் அரசு விதித்த சட்டத்தின் படி, 2,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும். மேலும், அவ்வாறு வெளியே வருபவர்கள் ரேடார்களால் கண்டறியப்பட்டு அந்த நபர்களுக்கு அபராதம் குறித்து எச்சரிக்கை குறுஞ்செய்தி ஒன்று அவர்களின் செல்போனிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.