அபுதாபியில் தொழிலாளர்களுக்கென இலவச கொரோனா பரிசோதனை மையம்..!!! அபுதாபி DED தகவல்..!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் அமைந்துள்ள முசாஃபாவில் தொழிலாளர்களுக்கென பிரத்யேகமாக கொரோனா வைரஸிற்கான இரண்டு இலவச பரிசோதனை மையம் அபுதாபியின் பொருளாதார மேம்பாட்டுத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டுள்ளதாக அபுதாபி மீடியா அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சமூகத்தின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக ஐக்கிய அரபி அமீரகம் மேற்கொண்டுவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த இலவச பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதென அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை நிலையங்கள் அபுதாபியின் தொழில்நகரமான, தொழிலாளர்கள் அதிகம் வசிக்க கூடிய முசாஃபாவில் அமைந்துள்ளதாவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் படி, 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இருமல், அதிக காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா வைரஸின் அறிகுறிகளைக் கொண்ட அனைவரும் இந்த பிரத்யேக மையங்களில் தங்களை கட்டாயம் பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என்றும் அபுதாபியின் பொருளாதார மேம்பாட்டுத்துறையின் சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை மையத்தில் ரெசிடென்ஸ் விசா காலாவதியானவர்களும் தங்களை பரிசோதித்து கொள்ளலாம் என்றும் ட்விட்டர் வாயிலாக வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாவது பரிசோதனை மையம் முசாஃபா 12 ல் ஹூண்டாய் ஷோரூமுக்கு அருகிலும், இரண்டாவது பரிசோதனை மையம் முசாஃபா 43 ல் முசாஃபா பஜார் அருகே அமைந்துள்ளதாகவும் அபுதாபியின் பொருளாதார மேம்பாட்டுத்துறை தெரிவித்துள்ளது.
.@AbuDhabiDED announced the availability of COVID-19 testing facilities that will offer free of charge testing for workers. The clinics, located in Mussafah, has been set up as part of the precautionary measures put in place to ensure the health and safety of the community. pic.twitter.com/zQOzwf5L3f
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) April 16, 2020