அமீரகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த இந்தியர்..!!! சோகத்தில் குடும்பத்தினர்…!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (திங்கள்கிழமை, ஏப்ரல் 6, 2020) சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகத்தின் சார்பாக வெளியிடப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய அறிக்கையில் 277 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. உயிரிழந்தவர் இந்தியாவை சேர்ந்த கேரளாவை பூர்விகமாகக் கொண்ட, 38 வயதுடைய ஹாரிஸ் என்ற தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. அஜ்மானை வசிப்பிடமாகக் கொண்ட இவர் அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் PRO வாகப் பணியாற்றி வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், இவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் மார்ச் 31ம் தேதி அஜ்மானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவருடன் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர். இவருக்கு கொரோனா வைரஸிற்குண்டான அறிகுறிகள் தென்பட்டதை தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவருடன் பணிபுரியும் நண்பர்கள் கூறியுள்ளனர்.
ஹாரிஸின் நண்பர்களில் ஒருவர் கூறிய போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாகக் கூறினார். மேலும், அந்த நபர் கூறுகையில், “எங்களுக்கு தெரிந்த வரையில் அவருக்கு உடல்நிலையில் எந்தவித பாதிப்பும் இருந்ததில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவருக்கு நிமோனியா இருப்பதாக மருத்துவர் கூறினார். பின்னர், இரண்டு நாட்களில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதன் பின்பு, அவருக்கு கொரோனா வைரசிற்கான மருத்துவ பரிசோதனை செய்த பொழுது அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்து விட்டது” என்று கூறினார்.
மேலும், ஹாரிஸ் இறந்த செய்தியை கேரள மாநிலம் கண்ணூரில் இருக்கக்கூடிய குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார். ஹாரிஸ் பற்றி மற்றொரு நண்பர் கூறுகையில், ஹாரிஸிற்கு சிறு வயதில் குழந்தைகள் இருப்பதாகவும் அவருடைய மனைவி தற்பொழுது கர்ப்பமுற்று இருப்பதாகவும் கூறினார். இந்த செய்தி தங்களுக்கு மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியதாகவும் கூறினார்.
அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பாக கூறுகையில், ஹாரிஸ் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்ததை தொடர்ந்து அவர் பணிபுரிந்த அலுவலகம் மற்றும் தங்கியிருந்த இடம் அனைத்தும் முறையாக சுத்திகரிப்பு செய்யப்பட்டு விட்டதாகக் கூறினார். மேலும் அவருடன் தங்கியிருந்த இரண்டு ஊழியர்கள் கொரோன வைரஸிற்கான பரிசோதனை மேற்கொண்டுவிட்டதாகவும் கூறினார். இன்னும் அவருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் இதர ஊழியர்களும் பரிசோதனைக்காக அனுப்பப்படுவர் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் வாடிக்கையாளர்களுடன் அவர் நேரடி தொடர்பில் இருந்ததில்லை என்றும் நிர்வாகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.