இந்தியாவால் திருப்பி அனுப்பப்பட்ட இறந்தவர்களின் உடல்கள் இன்று மீண்டும் அமீரகத்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது..!!
அபுதாபியில் இருந்து புது டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய அரசாங்கத்தால் திருப்பி அனுப்பப்பட்ட மூன்று இந்தியர்களின் உடல்கள் இன்று மாலை மறுபடியும் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இந்திய துணை தூதரகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மரணித்த மூன்று இந்தியர்களின் உடல்கள் குடும்ப உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இறுதி சடங்கிற்காக கடந்த வெள்ளிக்கிழமை அபுதாபியிலிருந்து புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் கொரோனாவிற்கான நடவடிக்கைகளை காரணம் காட்டி இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து இந்திய அதிகாரிகள் அபுதாபிக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மிகவும் வேதனையடைந்த குடும்பத்தினர்கள் மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இந்திய தூதரகத்தின் உதவியுடன் இன்று மாலை அம்மூவரின் உடலையும் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இறந்த மூவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தியா வரை சென்ற உடலை வாங்க மறுத்து அபுதாபிக்கு திருப்பி அனுப்பிய இந்திய அதிகாரிகளின் செயலால் இறந்தவர்களின் உறவினர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை மறுபடியும் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து இறந்தவர்களின் இறுதி சடங்கு சொந்த ஊரில் நடக்கவிருப்பதால் குடும்பத்தினர்கள் அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர். இறந்தவர்களில் ஜாக்சீர் சிங் மற்றும் சஞ்சீவ் குமார் ஆகியோரின் உடல்கள் பஞ்சாபிற்கும், கமலேஷ் பட்டின் உடல் உத்தரகண்ட் பகுதிக்கும் எடுத்துச் செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இறந்தவர்களில் ஒருவரான சஞ்சீவ் குமாரின் மைத்துனர் இந்தர்ஜீத் இது குறித்து கூறுகையில், “இறந்தவர்களின் சடலத்தை விமான நிலையத்தில் பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்களின் மூன்று உடல்களையும் கொண்டு செல்லும் சரக்கு விமானம் திங்கள்கிழமை அதிகாலை 1 மணிக்குள் புது டெல்லியை அடையும். இந்தியாவிலும் ஊரடங்கு அமலில் இருப்பதால் உடல்களை பெற்றுக்கொள்ள உறவினர்கள் விமான நிலையம் வருவதற்கான அனுமதிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். குடும்பத்தினர்கள் புது டெல்லிக்கு ஆம்புலன்சில் புறப்பட்டுள்ளனர். இங்கிருந்து கொண்டு செல்வதற்கான அனுமதிக்காகவே அவர்கள் காத்திருந்தனர்” என்று அல் அய்னில் வசிக்கும் இந்தர்ஜீத் கூறினார்.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அனைத்து ஆவணங்களையும் ஏற்பாடு செய்ய முழு ஆதரவு அளித்ததாகவும், மேலும் இந்த சூழ்நிலையில் தங்களுக்கு உதவி புரிந்த சமூக சேவகர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe