இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மே 3 ம் தேதி வரை நீட்டிப்பு..!!! பிரதமர் அறிவிப்பு..!!!
இந்தியாவில் கொரோனா பாதிப்பையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தற்பொழுது அது முடிவடையக்கூடிய நிலையில், ஊரடங்கு உத்தரவை மே 3 ம் தேதி வரை மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று நிறைவடையும் வேளையில், பல்வேறு மாநில முதலமைச்சர்கள் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை தொடர்ந்து இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இவர் கூறுகையில், “கொரோனாவை எதிர்த்து இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். ஊரடங்கால் சிலருக்கு ஏற்பட்ட சிரமங்களை புரிந்து கொண்டேன். உலக நாடுகளை ஒப்பிடுகையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்தியா சிறந்து விளங்குகிறது” என்று கூறியுள்ளார்.
மேலும், கூறுகையில், “கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஊரடங்கும் சமூக இடைவெளியும் முக்கிய பங்காற்றுகின்றன. கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு உத்தரவு மே 3 ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஏப்ரல் 20ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களும் மாநிலங்களும் கண்காணிக்கப்படும். கொரோனாவின் தீவிரம் குறைந்தால் ஏப்ரல் 20 க்குப் பிறகு ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்கும். சில முக்கிய பணிகளுக்கு அனுமதியளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் இதுவரை கொரோனாவினால் 10,453 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 358 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 1,173 பேர் கொரோனாவினால் பாதிக்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.