அமீரக செய்திகள்

துபாயில் 24 மணி நேர சுத்திகரிப்பு பணி..!! பொது மக்கள் வெளியே வர தடை..!! மீறினால் வழக்கு..!!

அமீரகத்தில் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேசிய அளவிலான சுத்திகரிப்பு திட்டமானது இன்று முடியவிருந்த நிலையில், மேலும் நீட்டிக்க போவதாக அமீரக அரசு ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், துபாயில் இந்த சுத்திகரிப்புப் பணிகளானது இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் அடுத்த இரு வாரங்களுக்கு நாள் முழுவதும் (24 hours) மேற்கொள்ளப்படும் என்று துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான உச்சக் குழு (Dubai’s Supreme Committee of Crisis and Disaster Management) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதார பணிகள் நடைபெறும் முழு நேரமும் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுத்திகரிப்புப் பணிகளானது இன்று இரவு தொடங்கி அடுத்த இரு வாரங்களுக்கு நாளின் 24 மணி நேரமும் செயல்படுத்தப்படும் என்றும், சூழ்நிலைகளை பொறுத்து இந்த முடிவானது நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காலங்களில் துபாயில் இருக்கும் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள இடங்களில் விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்குள்ள மக்கள் அனைவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்யவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பணிகள் மேற்கொள்ளப்படும் இரு வாரங்களில் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், உணவு விற்பனை நிலையங்களான யூனியன் கோஆபரேட்டிவ் ஸ்டோர்ஸ் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்றவற்றிற்கும் மருந்தகங்களுக்கும் மற்றும் உணவு மற்றும் மருந்துகள் டெலிவரி செய்வதற்கும் எப்பொழுதும் போல் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட நபர்கள் அவசியமில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளானது சில குறிப்பிட்ட முக்கிய துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனிநபர்கள் வெளியே செல்வதற்கான விதிமுறைகள்
 • வீட்டை விட்டு வெளியேறும் நபர்கள் முக்கியமாக முகக்கவசம் (face mask) மற்றும் கையுறைகளை (gloves) கண்டிப்பாக அணிந்து வெளியேற வேண்டும் என்றும் மற்றவர்களுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • அத்தியாவசிய பொருட்களான உணவு, மருந்துகள் மற்றும் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் உணவு விடுதிகள், சூப்பர் மார்க்கெட், மருந்தகங்கள் போன்றவற்றிற்கு வீட்டிலிருந்து ஒரு நபர் மட்டுமே வெளியே வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வெளியே செல்ல அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் சார்ந்த துறைகள்
 • சுகாதாரத்துறை (மருத்துவமனை, மருந்தகங்கள், கிளினிக்க்குகள்)
 • உணவு விற்பனை நிலையங்கள் ( சூப்பர் மார்க்கெட், குரோசரி)
 • டெலிவரி சேவை (உணவு, மருந்துகள்)
 • ரெஸ்டாரண்ட் (ஹோம் டெலிவரிக்கு மட்டும் அனுமதி)
 • மருத்துவத்துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் சப்ளையர்கள்
 • அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்கும் தொழில் நிறுவனங்கள்
 • மின்சார மற்றும் நீர் வாரியம், பெட்ரோல் நிலையங்கள்
 • தொலைத்தொடர்பு துறை
 • ஊடக துறை
 • ஏர்போர்ட், ஏர்லைன்ஸ், துறைமுகம், ஷிப்பிங்
 • கஸ்டம்ஸ்
 • அரசு மற்றும் தனியார் செக்யூரிட்டி சேவைகள்
 • குப்பை, கழிவு நீர், சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு சார்ந்த நிறுவனங்கள்
 • கொரோனா வைரஸிற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியார் துறைகள்
 • பொது போக்குவரத்து துறை (பஸ் மற்றும் டாக்ஸி)
 • கட்டுமானத்துறைகள் (துபாய் முனிசிபாலிடியால் அனுமதிக்கப்பட்டவை மட்டும்)
பகுதி நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட ஊழியர்கள் சார்ந்த துறைகள்

(ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்ட நேரம் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை)

 • வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகள் (பேங்க் மற்றும் எக்சேன்ஜ் சென்டர்)
 • சமூக நலம் சார்ந்த சேவைகள்
 • லாண்டரி சேவைகள் (அனுமதிக்கப்பட்டவை மட்டும்)
 • பராமரிப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள்

அனைத்து சமூக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் அறிவிக்கப்பட்ட இந்த வழிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. மேலும், இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகளை பின்பற்றி கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!