சுற்றுலாவாசிகள் துபாய் வர ஜூலை மாதம் முதல் அனுமதிக்க வாய்ப்பு..!!!
துபாயின் சுற்றுலா மற்றும் வர்த்தக சந்தை துறையின் இயக்குநர் ஜெனரல் ஹெலால் அல் மர்ரி (director general of Dubai’s Department of Tourism and Commerce Marketing) , ஜூலை மாத தொடக்கத்தில் இருந்து சுற்றுலாவாசிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருவதற்கு அனுமதிக்க வாய்ப்பிருப்பதாகஇன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார். அமீரகத்தில் இயங்கும் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் அல் மர்ரி பேசுகையில், கொரோனாவின் பாதிப்பால் ஏற்பட்டுள்ள உலகளாவிய நிலைமைகளை பொறுத்து அமீரகத்திற்கு சுற்றுலாவாசிகள் வருவது செப்டம்பர் வரை தாமதமாகவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
“கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை தொடர்ந்து பல நாடுகள் மற்ற நாடுகளுக்குண்டான பயணங்களை தடை செய்யப்பட்டிருப்பதால் இது சம்பந்தப்பட்ட நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலை பொறுத்தது” என்றும் அல் மர்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது, நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்ற நாடுகளுடனான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வெளிநாட்டு விமான நிறுவனங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் சேவைகளை மட்டும் செய்து வருகின்றன. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 17 முதல் விசிட் விசாக்கள் வழங்குவதையும் அமீரகம் நிறுத்தி வைத்துள்ளது.
சுற்றுலாத்துறை அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்றாகும். துபாயில் கடந்த ஆண்டு 16.7 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இதன் மூலம், உள்ளூர் பொருளாதாரத்திற்கு 150 பில்லியனுக்கும் அதிகமான பங்களிப்பை சுற்றுலாத்துறை வழங்கியது குறிப்பிடத்தக்கது.