தொழிலாளர்கள் நலனில் அக்கறை காட்டும் துபாய் போலீஸ்..!!! உணவு பொட்டலங்கள், சானிடைசர் வழங்கி கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்பாடு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம், துபாய் காவல்துறையினர் துபாயின் பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு சானிடைசர்கள், உணவுப் பொட்டலங்கள் போன்றவற்றை விநியோகம் செய்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
துபாய் காவல்துறையின் மனித உரிமைத் துறை இயக்குநர் பிரிகேடியர் முகமது அல் முர் (Brigadier Mohammad Al Murr), துபாயில் உள்ள அல் முஹைஸ்னா (Al Muhaisnah), அல்குஸ் இண்டஸ்ட்ரியல் ஏரியா (Al Quoz Industrial Area), ஹெபல் அலி இண்டஸ்ட்ரியல் ஏரியா (Hebel Ali Industrial Area) மற்றும் துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க் (Dubai Investment Park) போன்ற பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துள்ளார்.
இது குறித்து பிரிகேடியர் முகமது அல் முர் அவர்கள் கூறுகையில் “அமீரகத்தின் மக்கள் தொகையில் ஒரு முக்கிய அங்கமாக எண்ணிக்கையில் அதிகளவில் இருக்கக்கூடிய தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பிரச்சாரத்தை தொடங்கியுள்ளோம். அவர்களுக்கு கொரோனா வைரசிற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பதையும், அவர்களுக்கு சானிடிசர்களை வழங்கியும், சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டிய தேவைகளைப் பற்றியும் அவர்களுக்கு நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கொரோனா வைரஸ் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்த தகவல்களும் கற்பிக்கப்படுகின்றன. மேலும், பல்வேறு மொழிகளில் அனைத்து தொழிலாளர்களுக்கும் புரியும் வண்ணம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.