ரமலான் மாதத்தில் 10 நபருக்கு மேல் ஒன்று கூட தடை..!!! துபாய் அரசாங்கம் அறிவிப்பு..!!!
ரமலான் மாதம் ஆரம்பிப்பதை முன்னிட்டு துபாய் அரசாங்கம் பொதுமக்களுக்கு சில வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அனைவரும் கடைபிடித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, ரமலான் மாதத்தின் இஃப்தார் மற்றும் ஸஹர் நேரங்களில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே ஒன்றாக கூட வேண்டும் என்றும் இவ்வாறு ஒன்று கூடும் போது அக்கூட்டத்தில் 10 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் துபாய் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இந்த நேரங்களில் ஒருவருக்கொருவர் கை குலுக்குதல் போன்ற செயல்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
துபாய் அரசாங்கம் வெளியிட்டுள்ள மற்ற வழிகாட்டுதல்கள்
மற்றவர்களுக்கு உணவு வழங்குதல்
- துபாய் அரசாங்கம் மற்றும் அதிகாரப்பூர்வ தொண்டு நிறுவனங்களின் மூலமே உணவு நன்கொடை வழங்க வேண்டும். எந்தவொரு உணவையும் தனது வீட்டிற்கு வெளியே இருக்கும் எந்தவொரு நபருக்கும் நேரடியாக வழங்க கூடாது.
- கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாக, தங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் மற்ற வீடுகளில் உள்ள நபர்களுக்கு உணவு வழங்க கூடாது.
இறை வணக்கம்
- ஒரே வீட்டில் இருக்கும் உறுப்பினர்கள் மட்டுமே ஒன்றாக இணைந்து இறைவணக்கங்களில் ஈடுபட வேண்டும். வெவ்வேறு இடங்களில் உள்ள மக்கள் ஒன்றாக இணைந்து இறை வணக்கங்களில் ஈடுபட கூடாது.
வீட்டை விட்டு வெளியேறுதல்
- அவசியக் காரணங்களுக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுகிறது.
- அவசியக் காரணங்களுக்காக மட்டுமே மற்ற வீடுகளில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வேண்டும்.
- வீட்டிற்கு வெளியே இருக்கும்போது, எந்த மேற்பரப்பையும் தொடுவதைத் தவிர்க்கவும், அவ்வாறு எந்த இடத்தையேனும் தொட்டால் உடனடியாக கைகளைத் சுத்தப்படுத்தவும்.
- கைகள் சோப்பு மற்றும் தண்ணீர் மூலம் சரியாக கழுவப்படும் வரை முகத்தைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
- நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் தனி நபர்கள் வீட்டிலேயே இருக்கவும் பொது இடங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
போக்குவரத்து (பொது அல்லது தனியார்)
- வீட்டை விட்டு வெளியேறும்போது முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும்.
- சானிடிசர்களை எந்நேரமும் வைத்திருக்க வேண்டும் என்றும் தனியார் அல்லது பொது போக்குவரத்தில் இருந்தாலும் அடிக்கடி அதனை உபயோகித்து சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், எவருக்கேனும் கொரோனா வைரசிற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுமானால், உடனடியாக அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு உடனடியாக சுகாதார ஆணையத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
source : Khaleej Times