இந்தியர்களுக்கு ’10 மில்லியன் அமெரிக்க டாலர்’ கடனுதவி..!! ஆன்லைனில் வலம் வரும் மோசடி குறித்து DFSA எச்சரிக்கை..!!
இளம் தொழில்முனைவோருக்கு ஆதரவளிப்பதற்கும், கொரோனா வைரஸிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கும் 10 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்குவதாக கூறி ஆன்லைனில் வளம் வரும் மோசடிக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமீரக குடியிருப்பாளர்களையும் நிதி சேவைகள் வழங்கும் நிறுவனங்களையும் துபாய் நிதிச் சேவை ஆணையம் (Dubai Financial Services Authority – DFSA) கேட்டுக்கொண்டுள்ளது.
துபாய் நிதிச் சேவை ஆணையம் (DFSA) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, மோசடி செய்பவர்கள் லிங்க்ட்இன் (LinkedIn) பக்கத்தில் ஒரு போலியான கணக்கை தொடங்கி அதில் தற்போதைய DFSA ஊழியரின் புகைப்படத்தை வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த போலியான லிங்க்ட்இன் பக்கத்தில் “கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இளம் தொழில்முனைவோருக்கு உதவுவதற்கும், இந்திய மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் பூஜ்ஜிய சதவீத வட்டி வருமானத்துடன் 10 மில்லியன் அமெரிக்க டாலர்ஸ் கடனை DFSA வழங்கியுள்ளது” என ஒரு கற்பனையான பதிவை வெளியிட்டுள்ளதாக DFSA வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த பதிவில், கடனை பெறுவதற்கு, விண்ணப்ப படிவம் கோரப்பட்டு அதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக DFSA கூறியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மோசடி நடவடிக்கைகள் அதிகரிப்பது குறித்து DFSA நுகர்வோர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த மோசடி குறித்து DFSA வெளியிட்டுள்ள அறிக்கையில், “லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் போலியானது என்பதை DFSA உறுதிப்படுத்துகிறது. மேலும் லிங்க்ட்இன் கணக்கின் மூலமாக கடன் வழங்கப்படுகிறது என்பது கற்பனையானது மற்றும் அது ஒரு பெரிய மோசடி. DFSA அதன் நுகர்வோருக்கு எந்த வகையான கடன்களையும் வழங்காது. இது போன்ற மோசடிகளுக்கு யாரும் பதிலளிக்க வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் மோசடிக்கு தொடர்புடைய எந்தவொரு தரப்பினருக்கும் நீங்கள் பணம் அனுப்பவோ அல்லது கொடுக்கவோ கூடாது என்று DSFA கடுமையாக அறிவுறுத்துகிறது” என்று அதில் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் பேரில் நடைபெறும் இது போன்ற மோசடி நடவடிக்கைகளை தடுப்பதற்காக, ஐக்கிய அரபு அமீரக வங்கி கூட்டமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி, அபுதாபி காவல்துறை மற்றும் துபாய் காவல்துறை ஆகியவை, நிதி தொடர்பான சைபர் கிரைம் மற்றும் மோசடிகளிலிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்கும், மோசடிக்கு எதிரான கல்வி கற்பிப்பதற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் “தேசிய மோசடி விழிப்புணர்வு பிரச்சாரத்தை (national fraud awareness campaign)” தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக கொரோனா பாதிப்பையொட்டி அனைத்து பரிவர்தனைகளையும் ஆன்லைன் வழியாக மேற்கொள்ள அரசாங்கத்தால் அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து இது போன்ற மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.