கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த 4 வயது இந்திய சிறுமி..!! அமீரகத்தில் குணமடைந்த குறைந்த வயதுடையவர் இவரே..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயதுடைய ஷிவானி என்ற இந்திய சிறுமி ஒருவர், கடந்த வாரம் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சிறுமியே அமீரகத்தில் இதுவரையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முற்றிலுமாக குணமடைந்த நபர்களில் மிகவும் குறைந்த வயதுடையவர் ஆவார்.
துபாயை வசிப்பிடமாக கொண்ட ஷிவானிக்கு கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து 20 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் 20 ஆம் தேதி அன்று கொரோனாவிலிருந்து அவர் முற்றிலுமாக குணமடைந்தாக அல் புத்தைம் ஹெல்த் ஹப் (Al Futtaim Health Hub) மருத்துவ ஊழியர்களால் வீட்டிற்கு வழியனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த, கொரோனவை எதிர்த்து போராடுகின்ற, முன்னணி சுகாதார ஊழியர்களில் ஒருவரான ஷிவானியின் தாயிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து, கொரோனாவிற்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் ஷிவானியின் தந்தை மற்றும் ஷிவானிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதில் துரதிர்ஷ்டவசமாக ஷிவானிக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து ஷிவானியும் அவரது தாயும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஷிவானி ஏற்கெனவே கடந்த ஆண்டு கேங்க்லியோனூரோபிளாஸ்டோமா (ganglioneuroblastoma) எனப்படும் அரிய வகை சிறுநீரக புற்றுநோயை எதிர்த்துப் போராடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஷிவானிக்கு மிகவும் கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. அவர் ஏற்கெனவே புற்றுநோயிலிருந்து மீண்டு வந்திருப்பதால், மருத்துவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் சிகிச்சை மேற்கொணடு வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“ஷிவானி கடந்த ஆண்டுதான் கீமோதெரபி சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார். எனவே அவரது நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் பலவீனமாக இருந்தது” என்று அல் புத்தைம் ஹெல்த் ஹப்பின் மருத்துவ குழு இயக்குநரும், சிவானிக்கு சிகிச்சையளித்த குடும்ப மருத்துவ ஆலோசகருமான டாக்டர் தோல்ப்கர் அல் பாஜ் (Dr. Tholfkar Al Baaj) கூறியுள்ளார்.
மேலும் அவர் “நோயின் கடுமையான பாதிப்பை உருவாக்கும் ஆபத்துகள் அதிகம் இருந்ததினால் மருத்துவர்கள் கவலை அடைந்தனர். எனவே, நாங்கள் ஷிவானியை உன்னிப்பான கண்காணிப்பில் வைத்திருந்தோம். அதிர்ஷ்டவசமாக அவருக்கு கொரோனா தொற்றுநோயினால் சிக்கல்கள் ஏதும் ஏற்படவில்லை “என்றும் கூறியுள்ளார்.
20 நாட்கள் சிகிச்சையில் இருந்த ஷிவானிக்கு தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட இரண்டு ஸ்வாப் டெஸ்ட்களிலும் நெகடிவ் ரிசல்ட் வந்ததை தொடர்ந்து அவர் குணமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனினும் அவர் இப்போது வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் ஷிவானியின் தாயிற்கு கொரோனா அறிகுறி இருப்பதால் அவர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அவரும் விரைவில் குணமடைந்து தனது மகளுடன் மீண்டும் இணைவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
அல்-புத்தைம் ஹெல்த் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹைதர் அல் யூசுப் (Dr. Haidar Al Yousef) இது குறித்து கூறியதாவது, “ஷிவானி எந்தவிதமான துயரத்தையும் உணராமல் இருக்க ஷிவானியையும் அவரது தாயையும் முடிந்தவரை நெருக்கமாக வைத்திருப்பதை உறுதி செய்ய நாங்கள் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். ஷிவானியின் விஷயத்தில், நாங்கள் அவளை தொடர்ந்து கண்காணித்து வந்தோம், DHA நெறிமுறைகளின்படி தேவைப்படும்போது மட்டுமே அவருக்கு சிகிச்சை அளித்தோம். ஷிவானி கடந்த ஆண்டு தனது சிறுநீரக புற்றுநோய் அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டார். நாங்கள் அவரை பரிசோதித்தபோது, கொரோனா வைரஸ் அவரது சிறுநீரகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக அறிகுறி எதுவும் இல்லை. இதில் பங்களித்த அனைத்து முன்னணி சுகாதார ஊழியர்களுக்கும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். சுகாதார ஊழியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்வதை ஒரு மரியாதையாக நாங்கள் கருதுகிறோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கொரோனாவை எதிர்த்து போராடி அதில் வெற்றியும் அடைந்துள்ள துணிச்சலான நோயாளி என்பதற்காக ஷிவானிக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டுள்ளது..
ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிய வயதில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களில் ஷிவானியும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக அபுதாபியில் ஏழு வயது சிரிய பெண் மற்றும் ஒன்பது வயது பிலிப்பைன்ஸ் சிறுவன் உள்ளிட்டோர் கொரோனா பாதித்து குணமடைந்துள்ள மற்ற சிறுவர்கள் ஆவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.