துபாயில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே செல்ல அனுமதி பெற முடியும்..!!! துபாய் காவல்துறை அதிகாரி அறிவிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கெதிரான பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் பட்சத்தில், தற்சமயம் துபாயில் கடந்த சில நாட்களாக நாள் முழுவதுமான 24 மணி நேர சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் இந்த நாட்களில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு அத்தியாவசிய தேவையென்றால் மட்டும் துபாய் காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலைதளத்தில் அனுமதி பெற்றுக்கொண்டால் மட்டுமே வெளியே செல்லலாம் என அறிவிக்கப்பட்டிருந்தத்து. இந்நிலையில், தற்பொழுது துபாயில் வெளியே செல்வதற்கான அனுமதி பெறுவது தொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை துபாய் காவல்துறையை சார்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து துபாய் காவல்துறை அதிகாரி தெரிவிக்கையில், துபாயில் வசிக்கும் மக்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே செல்வதற்கான அனுமதி பெற முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன்படி, தங்களின் அத்தியாவசியத் தேவைகளான மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்குவதற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், துபாயில் இருக்கக்கூடியவர்கள் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி பெற்றுக் கொண்டு ATM சென்று பணம் எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “துபாயில் மக்கள் வெளியே செல்வதற்காக அனுமதி பெறும் முறையை நாங்கள் புதுப்பித்துள்ளோம். இதனையொட்டி, துபாயில் இருக்கக்கூடியவர்கள் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ATM ல் பணம் எடுக்க அனுமதி பெற முடியும். மேலும், அத்தியாவசிய பொருட்கள் அல்லது மருந்துகளை வாங்க அனுமதி பெற விண்ணப்பிக்கும் நபர்கள் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி பெறலாம்” என்று கூறியுள்ளார்.
இந்த ஆன்லைன் முறைப்படி, குடியிருப்பாளர்கள் அனைவரும் தங்களின் அவசரகால சூழ்நிலைகளில் கூட வெளியில் செல்வதற்கான காரணத்தைக் கூறி அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் வாகனங்களில் வெளியே சென்றாலும் கூட அவர்களின் தாய்நாடு, வேலை, தொலைபேசி எண், அடையாள எண் மற்றும் வாகன எண் போன்ற விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி மேலும் கூறுகையில் “பணம் எடுக்க விரும்புவோர் தங்களின்
குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே இருக்கும் ATM லிருந்தே பணம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான பயண நேரம் ஒரு மணி நேரத்தை தாண்டக்கூடாது” என்றும் தெரிவித்துள்ளார்.
துபாய் குடியிருப்பாளர்கள் வெளியே செல்வதற்கு https://dxbpermit.gov.ae/permits என்ற இணையதளத்தில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் அல்லது 800 737648 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு வெளியே செல்ல அனுமதி பெறலாம்.