கொரோனாவிற்கான போராட்டத்தில் அமீரகத்திற்கு உதவும் இந்தியா..!! ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மருந்தை வழங்கவுள்ளதாக தகவல்..!!
கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் திறன் வாய்ந்த மருந்தாகக் கண்டறியப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (hydroxychloroquine,HCQ) என்ற மருந்தை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வழங்குவதற்கான கண்காணிப்பு நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன என்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்திய தூதர் பவன் கபூர் இன்று (ஏப்ரல் 15,2020) கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து இந்த மாத்திரையை இறக்குமதி செய்ய ஆர்டர் செய்திருந்த நிலையில், அதனை விரைவாக வழங்குமாறு ஐக்கிய அரபு அமீரக அரசின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அமீரகத்தின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு அளித்த செய்தியில், “ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மாத்திரையை வழங்க உதவுமாறு ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இங்குள்ள ஒரு சில நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மருந்து இறக்குமதி செய்ய கோரிக்கை விடுத்திருந்தன. அந்த நிறுவனங்கள் மூலமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மாத்திரையை வழங்குவதற்காக இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கிறோம் ”என்று அவர் கூறியுள்ளார்
இந்தியாவின் நட்பு நாடுகளின் வேண்டுகோளை ஏற்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மருந்தை ஒன்றின் பின் ஒன்றாக ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதிக்கிறது. இந்நிலையில் மருந்து இறக்குமதி செய்ய உள்ளூர் நிறுவனங்களின் கோரிக்கையை அமீரக அரசும் ஆதரிப்பதால், இந்தியா அதற்குண்டான நடைமுறைகளை விரைவாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இது பற்றி இந்தியாவை சேர்ந்த ஒரு பத்திரிகையில் வந்த செய்தியில், 200 மி.கி அளவு கொண்ட 32.5 மில்லியன் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மாத்திரைகள் மற்றும் செயலில் உள்ள 10 மெட்ரிக் டன் மருந்து பொருட்கள் வழங்குவதற்கான கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் விடுத்ததை தொடர்ந்து, இந்தியா இந்த மருந்தை அபுதாபி மற்றும் துபாய்க்கு விரைவாக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து போன்ற கொரோனா வைரசால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சப்ளை செய்த பின்னர், இந்தியாவின் நட்பு நாடுகளான ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான் மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்காவை சார்ந்த சில நாடுகளுக்கும் இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (HCQ) மற்றும் பாராசிட்டமால் மாத்திரைகளை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டான் நாட்டு தலைவர்களிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொண்டிருக்கும் தனிப்பட்ட நட்பின் அடிப்படையில் அவ்விரு நாடுகளுக்கும் விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இந்தியா ,கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு இந்தியாவை சேர்ந்த 15 மருத்துவர்கள் கொண்ட குழுவை குவைத் நாட்டிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
source : Gulf News