வருமானம் இன்றி தவிக்கக்கூடிய இந்திய தொழிலாளர்களுக்கு 1 இலட்சம் திர்ஹம்ஸ் நன்கொடை வழங்கிய LULU குழுமம்..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் பிரபல விற்பனை நிறுவனமான லூலூ (Lulu) குழுமத்தின் தலைவரான M.A.யூசுப் அலி அவர்கள் அமீரகத்தில் கொரோனா தாக்கத்தால் வேலையில் பாதிப்பை சந்தித்திருக்கும் தொழிலாளர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைக்கு உதவும் வகையில் 1,00,000 திர்ஹம் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்புகளையொட்டி வேலை இழப்பு மற்றும் குறைவான சம்பளம் போன்ற பிரச்சனைகளால் சிரமப்படும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்திய சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் மூலமாக இந்த தொகை விநியோகிக்கப்படும் என்று சனிக்கிழமை இக்குழுமம் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொத்த தொகையிலிருந்து, 50,000 திர்ஹம்ஸ் தொகையானது துபாயில் உள்ள கேரள முஸ்லீம் கலாச்சார மையம் மூலமாகவும், 25,000 திர்ஹம் தொகையானது அபுதாபி இஸ்லாமிய மையம் மூலமாகவும் மற்றும் மீதமுள்ள தொகை அமீரகம் மற்றும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து அயராது செயல்படும் தன்னார்வலர்கள் மூலமாகவும் போதிய வருமானம் இன்றி இன்னல்களை சந்திக்கக்கூடிய தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
யூசுப் அலி அவர்கள் முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா வைரஸிற்கான பிரதமர் கேர்ஸ் நிதிக்கு (PM Cares Fund) ரூ.250 மில்லியனையும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் நிதிக்கு ரூ.100 மில்லியனையும் கொரோனா நிவாரண நிதிக்கான நன்கொடையாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
source : Gulf News