அமீரக செய்திகள்

2 வாரங்கள்..!! 647 கட்டிடங்கள்..!! Nakheel நிறுவனத்தின் மெகா சுத்திகரிப்பு திட்டம்..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் டெவலப்பர் (Dubai Developer) நிறுவனங்களில் ஒன்றான நக்கீல் நிறுவனம் (Nakheel), கொரோனா வைரஸிற்கு எதிரான, பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் தன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அளிக்கும் விதமாக, துபாயில் தனக்கு சொந்தமான அனைத்து குடியிருப்பு கட்டிடங்களிலும் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

துபாயில் உள்ள புகழ்பெற்ற இந்த நிறுவனமானது இரு வாரங்களில் தனக்கு சொந்தமான 647 கட்டிடங்களில் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 12 வரை நடைபெறும் இந்த சுத்திகரிப்புப் பணியில், நக்கீல் ஸ்ட்ராட்டாவால் (Nakheel Strata) நிர்வகிக்கப்படும் அனைத்து கட்டிடங்கள், நக்கீலின் குடியிருப்பு குத்தகை பிரிவின் (Nakheel’s residential leasing division) கீழ் உள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகள் என்று தனக்கு சொந்தமான அனைத்து கட்டிடங்களிலும் சுத்திகரிப்புப் பணிகளை மேற்கொள்கிறது.

பாம் ஜுமேரா (Palm Jumeirah), டிஸ்கவரி கார்டன்ஸ் (Discovery Gardens), தி கார்டன்ஸ் (The Gardens), ஜுமேரா ஹைட்ஸ் (Jumeira Heights), மசாகின் அல் ஃபுர்ஜன் (Masakin Al Furjan), பத்ரா (Badrah) மற்றும் இன்டர்நேஷனல் சிட்டி (International City) ஆகிய இடங்களில் உள்ள கட்டிடங்களில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் துபாய் முனிசிபாலிடியால் அங்கீகாரம் பெற்ற பொருட்களைப் பயன்படுத்தி லிஃப்ட் (lifts), லாபிகள் (lobbies) மற்றும் காரிடர் (corridors) என அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்படுகின்றன.

அமீரக அரசால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இரவு நேர சுத்திகரிப்புப் பணியின் போதே மேற்குறிப்பிட்ட கட்டிடங்களிலும் சுத்திகரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் அடிப்படையில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளும் இடங்களில் உள்ள குடியிருப்பாளர்கள் அனைவரும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வீட்டில் இருக்குமாறு நக்கீல் நிறுவனம் குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதவிர தினமும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மக்களால் அதிகமாக தொடக்கூடிய இடங்களான லிப்ட் மற்றும் இன்ன பிற இடங்களில் சானிடைசேஷன் செய்யப்படுவதாகவும், மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கட்டிட நுழைவு வாயில்கள் அனைத்திலும் ஹாண்ட் சானிடைசர் வைத்து பராமரித்து வருவதாகவும் கூறியுள்ளது. மேலும் நக்கீலிற்கு (Nakheel) சொந்தமான இடங்களில் பணிபுரியும் ஒப்பந்ததாரர்களுக்கும் (Contractors) பாதுகாப்பு நடைமுறைகள் கட்டாயமாக்கபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனமானது துபாய் முழுவதும் உள்ள அதற்கு சொந்தமான அனைத்து அலுவலகங்கள், மால்கள் மற்றும் கட்டிடங்களில் சுகாதார பணிகளை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து இடங்களிலும் தொடர்ந்து பின்பற்றியும் வருகிறது.

மால்களில் உள்ள சூப்பர் மார்க்கெட் மற்றும் மருந்தகங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டாலும், அங்கு வழக்கமான சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட வண்ணமே உள்ளன. மேலும் இந்நிறுவனம், அரசாங்கத்தின் கட்டளைகளுக்கு ஏற்ப வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை (Work From Home) அதன் ஊழியர்களுக்கு பின்பற்றி வருகிறது. தொடர்ந்து அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களையும் அதன் அலுவலகங்களுக்கு வருவதைத் தவிர்த்து அதற்குப் பதிலாக அந்நிறுவனத்தின் ஆன்லைன் சேவைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதனையொட்டி அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, “மக்களை பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். அதே போல், குடியிருப்பாளர்களும், வாடிக்கையாளர்களும் வீட்டிலேயே தங்கி இருத்தல், சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற அரசாங்கத்தால் கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக Nakheel நிறுவனம், அரசின் உத்தரவு படி அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டதை தொடர்ந்து தனது நிறுவன குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் ஷாப்பிங் மால்களில் ஒப்பந்தம் செய்துள்ள ப்ராபர்ட்டி உரிமையாளர்கள், ரீடைல் நிறுவனங்கள் மற்றும் மருத்துவத்துறையில் பணிபுரியும் குடியிருப்பாளர்கள் என அனைத்திற்கும், அரசின் மறுஉத்தரவு வரும் வரை வாடகை வசூலிக்கப்படமாட்டாது என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!