அமீரகத்தில் நடைபெற்று வரும் தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் நேரம் மாற்றியமைப்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ரமலான் மாதம் நாளை தொடங்குவதை முன்னிட்டு இதுவரையிலும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலும் நடைபெற்று வந்த தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் நேரமானது இன்று இரவிலிருந்து இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் அவசர மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் தெரிவித்துள்ளது. அமீரக குடிமக்களும், குடியிருப்பாளர்களும் இந்த ரமலான் மாதத்தை வசதியாக அணுகும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விற்பனை நிலையங்கள் இந்த நேரங்களில் உணவு விற்க அனுமதிக்கப்படுவர் என்றும் மேலும் கோ-ஆபரேட்டிவ் சொசைட்டி, குரோசரிகள், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் மருந்தகங்கள் 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற விற்பனை நிறுவனங்களான இறைச்சி, காய்கறிகள் மற்றும் பழங்கள், ரோஸ்டரிகள், ஆலைகள், மீன், காபி, தேநீர் மற்றும் நட்ஸ் வர்த்தகர்கள் மற்றும் இனிப்பு, சாக்லேட் விற்பனை செய்யும் நிறுவனம் போன்றவைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகளும் கொரோனா பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. மேலும் பணிபுரியும் பணியாளர்கள் 30 சதவீதத்திற்கு மிகாமலும் மற்றும் சமூக இடைவெளியை 2 மீட்டருக்கு குறையாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
அவசர காலங்களில் தவிர மக்கள் எவரும் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் நலனுக்காக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும், ரமலான் காலங்களில் குடும்ப உறுப்பினர்களின் வருகைகள் மற்றும் ஒன்று கூடலை தவிர்க்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் பின்பற்றக்கூடிய வணக்க வழிபாடுகளை தங்களின் வீடுகளிலேயே கடைபிடிக்குமாறும், அவசர காலங்களுக்காகவோ அல்லது அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காகவோ வீட்டை விட்டு வெளியேறினால் கையுறைகள் மற்றும் முகமூடிகளை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.