விசிட் விசா காலாவதியானால் அபராதம் கட்ட தேவையில்லை..!!! மூன்று மாத காலம் அவகாசம் நீட்டிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் விசிட் விசா, டூரிஸ்ட் விசா மற்றும் ரெசிடென்ஸ் விசாவில் இருப்பவர்களில் தங்களின் விசா காலம் முடிந்தவர்கள் “Overstay” அபராதம் செலுத்தத் தேவையில்லை என்று ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான பொது இயக்குநரகத்தின் (Directorate of Residency and Foreigners Affairs,GDRFA,Dubai) இயக்குநர் மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
மேலும், அமீரகத்தின் செல்லுபடியாகும் ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருப்பவர்கள் தற்போதுள்ள சூழ்நிலையினால் அமீரகத்திற்கு வர இயலாமல் 180 நாட்களுக்கு மேல் நாட்டிற்கு வெளியே இருப்பார்களேயானால், அவர்களின் விசாவினை புதுப்பித்துக்கொள்ள கூடுதல் கட்டணம் ஏதும் இல்லாமல் மூன்று மாத காலத்திற்குள் புதுப்பித்துக் கொள்ளலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை முடிவின் அடிப்படையில், மார்ச் 1, 2020 அன்று காலாவதியாகும் அனைத்து ரெசிடென்ஸ் விசாக்களும் நீட்டிக்கப்படும் என்று GDRFA இயக்குநர் மேஜர் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மெர்ரி தெரிவித்தார். இதன்படி, மார்ச் 1, 2020 அன்று முதல் காலாவதியான ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தாமல் அடுத்த மூன்று மாத காலத்திற்குள் தங்கள் விசாக்களைப் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்று அமைச்சரவை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
தற்பொழுது எந்தவொரு ஐக்கிய அரபு அமீரக விசாவினை வைத்திருப்பவர்களுக்கும் மூன்று மாதங்களுக்கு எந்தவொரு அபராதத்திலும் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் மேலும், ஐக்கிய அரபு அமீரக ரெசிடென்ஸ் விசாவினை வைத்திருந்து வெளிநாட்டில் இருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் மேஜர் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மெர்ரி அவர்கள் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை முடிவின்படி, சலுகைக் காலத்திற்கு (Grace Period) முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர முடியாத நிலையில் இருக்கும் ரெசிடென்ஸ் விசாக்களை வைத்திருப்பவர்கள் கூடுதல் கட்டணம் இல்லாமல் தங்கள் விசாக்களைப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என்றும் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை நாட்டின் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும். இந்த முடிவு குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளுக்கான நடைமுறைகளை எளிதாக்குவது, அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்தல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் துறைகளில் அரசாங்கத்தின் பணிகளின் முன்னேற்றத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அல் மெர்ரி கூறினார்.
ஐக்கிய அரபு அமீரக விசாக்களை வைத்திருப்பவர்கள் எந்தவொரு விசாரணைக்கும் 8005111 என்ற எண்ணில் கால் சென்டரை தொடர்பு கொண்டு விபரங்களைக் கேட்டுப் பெறலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.