இந்தியாவிற்கு Flydubai விமான சேவை தொடங்கப்படுவதாக வந்த செய்தி..!!! விமான நிறுவனம் மறுப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயை மையமாகக் கொண்டு இயங்கக்கூடிய மற்றுமொரு பட்ஜெட் கேரியர் விமான நிறுவனமான ஃபிளைதுபாய் (Flydubai) நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கான விமான டிக்கெட் முன்பதிவு சேவையை தொடங்கியுள்ளதாக செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிலையில், புதன்கிழமை (இன்று) ஃபிளைதுபாய் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் இதற்கு பதிலளிக்கும் விதமாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு விமானம் இயக்குவது இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை. விமானப்போக்குவரத்து தடையின் காரணமாக அமீரகத்தில் சிக்கி தவிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட் விசாவில் வந்த வெளிநாட்டவர்களை முதற்கட்டமாக கொண்டு செல்வதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்திருந்தோம். எனினும், இந்த விமான சேவையானது இந்திய அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இருந்து விமானம் தரையிறங்க அனுமதி பெறப்பட்டால் மட்டுமே விமான சேவை தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சொந்த நாடுகளுக்கு செல்ல முடியாமல் தவிப்போர்களை முதற்கட்டமாக கொண்டு சேர்க்க அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மற்றும் முயற்சிகளுக்கு ஃபிளைதுபாய் நிறுவனம் என்றும் துணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பலரும் டிக்கெட் புக் செய்ய முற்பட்டனர். இந்நிலையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் சார்பாக வெளியிட்ட ஒரு அறிக்கையில், பாகிஸ்தான் நாட்டிற்குள் விமானங்கள் தரையிறங்க எந்த ஒரு விமான நிறுவனத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அமீரகத்தில் வசிக்கக்கூடிய பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் குழப்பமடைந்தனர். தற்போது அந்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஃபிளைதுபாய் விமான நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.