அமீரக செய்திகள்

UAE : விமானப்போக்குவரத்து நிறுத்தம் எதிரொலி..!!! இறந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு செல்வதில் சிரமம்..!!! உறவினர்கள் அவதி..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, அமீரகத்தில் விமான போக்குவரத்து முழுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பல பயணிகள் வெளிநாடு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், விமானப் போக்குவரத்தின் இடைநிறுத்தம் காரணமாக அமீரகத்தில் உயிரிழந்தவர்களின் உடலை தாய் நாட்டிற்கு கொண்டு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் துபாய் மற்றும் அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து பதினைந்து இந்தியர்கள் கொரோனா வைரஸ் அல்லாத வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆறு பேரின் உடல்களை இந்த பயண தடைகளுக்கு மத்தியில் தாய் நாட்டிற்கு அனுப்பியுள்ளதாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் (Consulate General of India,CGI) செய்தி தெரிவித்துள்ளது.

CGI-ன் செய்தி தொடர்பாளர் நீரஜ் அகர்வால் கூறுகையில், “அமீரகத்தில் மார்ச் 22 ம் தேதியில் இருந்து இதுவரை மொத்தம் 15 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இறப்புகளில் பெரும்பாலானவை இதய பிரச்சினைகள் அல்லது கொரோனா வைரஸ் தவிர வேறு ஏதாவது மருத்துவநிலை காரணமாக ஏற்படும் இயற்கை மரணங்களும் மற்றும் விபத்தின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளும் அடங்கும் ” என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச விமானங்கள் நிறுத்திவைப்பு மற்றும் இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவு ஆகிய காரணங்களால், அமீரகத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பது பெரிய சவாலான காரியமாக இருக்கிறது என்று அகர்வால் கூறினார். இருந்தபோதிலும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த முதலாளிகள் மற்றும் சமூக சேவையாளர்கள் ஆகியோர் உதவியுடன் இதுவரை ஆறு உடல்களை சரக்கு விமானங்களில் இந்தியாவிற்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், ஏழு பேரின் உடல்கள் அமீரகத்திலேயே தகனம் செய்யப்பட்டுவிட்டது என்றும் மீதமுள்ள இரண்டு பேரின் உடல்களுக்கு அனுமதிக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!