உலக செய்திகள்

கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த சிங்கப்பூரில் மீண்டும் பரவல்..!! 1114 பேர் பாதிப்பு..!! அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் ஒரு மாதத்திற்கு மூடல்..!!

ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூரில் இன்று முதல் தனது நாட்டில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்கள், தனியார் மற்றும் பொது நிறுவன அலுவலகங்கள் உள்ளிட்டவை அடுத்த ஒரு மாத காலத்திற்கு மூடப்படுவதாக சிங்கப்பூரின் பிரதமர் லீ ஹஸின் லூங் (Lee Hsien Loong) அறிவித்துள்ளார். கொரோனா பரவலை முற்றிலும் கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவிலிருந்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் சூப்பர்மார்கெட் மற்றும் வங்கிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் சில மாதங்களுக்கு முன்பே பரவிய நிலையில், அதனை கட்டுப்படுத்த பிரதமர் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக மேற்கொண்டு அதிகம் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த முயற்சிக்கு உலக நாடுகள் பலவும் சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவலானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நிலவரப்படி, சிங்கப்பூரில் இதுவரை 1,114 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர், மற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி பிரமதர் கூறுகையில், “வரக்கூடிய காலங்களில் கொரோனாவின் தொற்று அதிகரிப்பதை தடுக்கும் வகையில் அதனை முன்கூட்டியே கட்டுப்படுத்தும் விதமாகவே இந்த தீர்க்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் ஹவுஸ்ஹோல்ட் மற்றும் பிசினஸ் சார்ந்தவர்களுக்கு என்றும் நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்றும் உறுதியளித்தார்.

இந்த காலகட்டத்தில் உணவு விடுதிகள், சூப்பர் மார்கெட், மருத்துவமனைகள், கிளினிக், பொது போக்குவரத்து மற்றும் முக்கிய வங்கி சேவைகள் எப்பொழுதும் போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் மே 4 ஆம் தேதி அமலில் இருக்கும் என்றும் பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் தொலைதூர கல்வி முறை (distance education) செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாத கால உத்தரவானது வரக்கூடிய நாட்களில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள் அனைவரும் அவசியம் இல்லாமல் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், முடிந்தவரை வீட்டினுள்ளேயே இருக்கமாறும் பிரதமர் லீ கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!