அமீரகத்தில் இன்று முடியவிருந்த “இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலான ஊரடங்கு” மேலும் நீட்டிப்பு…!!! சுத்திகரிப்புப் பணிகள் தொடரும்…!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸிற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றான கடந்த மாத இறுதியில் துவங்கப்பட்ட தேசிய சுத்திகரிப்பு திட்டத்தின் (National Sterilization Programme) மூலம் அமீரகம் முழுவதும் உள்ள அனைத்து இடங்களும் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று ஏப்ரல் 4 ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த தேசிய கிருமிநாசினி திட்டமானது, தற்பொழுது அமீரகம் முழுவுதும் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) மற்றும் உள்துறை அமைச்சகம் (MOI) சனிக்கிழமை (இன்று) அறிவித்துள்ளது.
இரு அமைச்சகங்களும் ஒன்றிணைந்து தினமும் இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை தொடர்ந்து சுத்திகரிப்பு இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் இந்த காலகட்டத்தில் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பரிந்துரைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த திட்டமானது நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் 26, வியாழக்கிழமை தொடங்கப்பட்ட இத்திட்டம் அடைந்த முதற்கட்ட வெற்றியை தொடர்ந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அங்குள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் சுத்திகரிப்பு திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அல்லது மருந்துகளை வாங்குவதைத் தவிர்த்து மற்ற எந்த காரணங்களுக்காகவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் மேற்கூறிய பணிகள் நடைபெறும் நேரங்களான இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும் இரு அமைச்சகங்களும் கேட்டுக் கொண்டுள்ளன.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribeசில குறிப்பிட்ட முக்கிய துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு மட்டுமே இந்த உத்தரவிலிருந்த்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி, தகவல் தொடர்பு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் காவல்துறை, இராணுவம், அஞ்சல், சரக்கு, மருந்து, நீர், உணவு, சிவில் விமானப் போக்குவரத்து, விமான நிலையம், பாஸ்போர்ட், நிதி மற்றும் வங்கி,அரசு ஊடகத் துறைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் கட்டுமானத் திட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய சேவைத் துறைகள் இந்த முக்கிய துறைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், முக்கியத்துறைகளில் வேலை பார்ப்பவர்களின் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்ட பின்னரே சுத்திகரிப்புப் பணியின் போது வெளியே நடமாடுவதற்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
source : Gulf News