UAE : தாயகம் திரும்பும் நடவடிக்கையை முன்னிட்டு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகங்கள் திறப்பு..!!
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை வரும் மே மாதம் 7ம் தேதி முதல் இந்தியாவிற்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது அலுவலகங்களை மீண்டும் திறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் பாதிப்பையொட்டி பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்ததால், அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ள விமான அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.
இந்திய தூதரகங்கள் வகுத்திருக்கும் பட்டியலின் அடிப்படையில் பயணிகளுக்கு விமான டிக்கெட் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அலுவலகங்களானது காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கும் என்றும் தேவைப்பட்டால் அலுவலகம் முடியும் நேரம் நீட்டிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் அபுதாபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதே போன்றே துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் உள்ள அலுவலகங்களும் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் திறக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசு அறிவிப்பின்படி, ‘திட்டமிடப்படாத சிறப்பு விமானங்கள்’ இந்தியர்களை தாயகத்திற்கு அழைத்து செல்லும் பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்படும். இருப்பினும், மே 7 ஆம் தேதி தொடங்கப்படவுள்ள விமானங்களின் நேரம் மற்றும் கட்டணம் செலுத்தும் முறை குறித்து இன்னும் எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இது பற்றிய முழு விபரங்கள் கூடிய விரைவில் தெரியப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
source : Khaleej Times