அமீரக செய்திகள்

“சைக்கிள் ரோந்து பிரிவில்” பணியாற்ற தன்னார்வலர்களை அழைக்கும் துபாய் போலீஸ்..!! துபாய் குடியிருப்பாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு..!!

கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தங்களின் “பைக்கர் பிரிவு” முயற்சியில் தன்னார்வத் தொண்டு செய்யுமாறு துபாய் காவல்துறை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதாக, துபாய் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறையின் (Criminal Investigation Department -CID) துணை இயக்குநர் கர்னல் முகமது அஹ்லி தெரிவித்துள்ளார்.

கர்னல் முகமது அஹ்லி கூறுகையில், இந்த புதிய முயற்சி, தன்னார்வலர்களுக்கு துபாய் காவல்துறை சைக்கிள்களில் செல்வதற்கும், நோய் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்கும் உதவும் என்று கூறியுள்ளார். மேலும் துபாய் காவல்துறை தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்லா கலீஃபா அல் மெர்ரி அவர்களின் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக தன்னார்வப் பணிகளில் பங்கேற்க ஊக்குவிப்பதற்காக ‘ரைடு வித் துபாய் பைக்கர்ஸ் யூனிட் (Ride with Dubai Bikers Unit)’ என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றார்.

இந்த முயற்சி கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பங்களிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தை ஆதரிப்பதற்காக தொடங்கப்பட்ட ‘நாங்கள் அனைவரும் பொறுப்பு (We Are All Responsible)’ எனும் பிரச்சாரத்தில் பங்கேற்கும் விதத்திலும் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கர்னல் முகமது அஹ்லி கூறியுள்ளார்.

இந்த முயற்சியில் இணையும் தன்னார்வலர்கள், சமூக இடைவெளியின் முக்கியத்துவத்தைப் பற்றி மக்களுக்கு கற்பிப்பதற்கும், முகக்கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை பொது வெளியில் அணியாதவர்களுக்கு விநியோகிப்பதற்கும் JBR, அரேபியன் ரான்செஸ், சிட்டி வாக், ஷேக் முகமது பின் ரஷீத் பவுல்யார்டு மற்றும் அல் கவானீஜ் உள்ளிட்ட துபாய் நகர தெருக்களில் ரோந்து செல்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பைக்கர் பிரிவு ரோந்தில் இணைய விருப்பம் உள்ள தன்னார்வலர்கள் சைக்கிள் ஓட்டுவதற்கு உடல் ரீதியாக தகுதியுள்ளவராக இருக்க வேண்டும் என்றும் மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை நிரூபிக்க சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றும் துபாய் காவல்துறை தன்னார்வ தளத்தின் இயக்குனர் கேப்டன் கலீஃபா முகமது கூறியுள்ளார். இந்த பைக்கர் பிரிவு ரோந்தில் ஆண் பெண் என இரு பாலினரும் தன்னார்வலர்களாக இணைந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“சைக்கிள் பிரிவு அணிகளில் பங்கேற்கும் தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒரு மேற்பார்வையாளர் மற்றும் துணை மருத்துவர்கள் இருப்பர் என்றும் பங்கேற்பாளர்களுக்கு போலீஸ் ஜாக்கெட்டுகள் வழங்கப்படும்” என்றும் கேப்டன் முகமது குறிப்பிட்டுள்ளார்.

துபாய் போலீஸின் ‘ரைடு வித் துபாய் பைக்கர்ஸ் யூனிட் (Ride with Dubai Bikers Unit)’ என்ற சைக்கிள் பிரிவில் தன்னார்வலர்களாக பங்கேற்க விருப்பமுள்ள துபாய் குடியிருப்பாளர்கள், துபாய் போலீஸ் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!